வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டடத்தில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் சிறி பாலவிநாயகர் அறநெறி பாடசாலை கட்டடம் தரமற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்டடத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தரணிக்குளம் கிரம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எஸ்.ராகுலன் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்ட 'சிசு தகம் செவன' நிகழ்சி திட்டத்தின் கீழ் 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர்களுக்கான அறநெறி பாடசாலை கட்டடமானது தரமற்றதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட தரணிக்குளம் சிறி பாலவிநாயகர் அறநெறி பாடசாலை கட்டடமானது 2019 ஆம் ஆண்டு மாசி மாதம் 3 ஆம் திகதி வன்னி பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்தால் ஒப்பந்தம் பெறப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டடமானது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட முன்பதாகவே கட்டடம், தரை மற்றும் சுவர்களில் வெடிப்புக்கள் விழுந்து உடைய ஆரம்பித்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக எதிர்ப்பு வெளியிட்ட கிராம மக்கள், தரமற்ற இக்கட்டடத்தில் அறநெறி பாடசாலை இயங்கினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அறநெறிக் கல்விக்கு அனுப்ப மறுத்துள்ளதாக சிறி பால விநாயகர் ஆலயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்ட கட்டடத்தின் தளம் உடைக்கப்பட்டு மீண்டும் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பிரதேச வாசிகள் இக்கட்டடம் தரமற்ற சீமேந்து பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தரமான முறையில் கட்டடத்தை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.