இந்தியாவில் தனி ஒரு நபராக ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி (19). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தாடு அரச பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர், அவ்வப்போது பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர்களுக்குச் சொந்தமான வயலில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தனர். அந்த பயிர்களை பயிரிடுவதற்கா தொழிலாளர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, தனி ஆளாக பயிரிடும் பணியை மேற்கொள்வது என ராஜலெட்சுமி முடிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்திலும் தானே நெற்பயிர்களை பயிரிட்டார். அக்கம் பக்கம் இருந்த விவசாய தொழிலாளர்கள் ராஜலெட்சுமிக்கு உதவ முன்வந்தபோதும், அன்புடன் அதை தவிர்த்தார். மாணவியின் இந்த முயற்சியை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

விவசாயம் குறித்தும், விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும் பரவலாக பேசப்படும் இச்சூழலில், விவசாயம் குறித்து ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்படும் வகையில் தனி ஆளாக நடவு செய்த கல்லூரி மாணவிக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.