இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் சுற்றுலா அபிவிருத்தி சபையும் பல்வேறு  பிரசார வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் தற்போது ஹிந்தி நடிகர்களைக் கொண்டு   ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

அந்தவகையிலேயே   பொலிவூட் நட்சத்திரங்களையும்  இலங்கை கிரிக்கெட் விற்பன்னர்களையும் கொண்டு  நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துவதற்கு   சுற்றுலா  ஊக்குவிப்பு பணியகம்  நடவடிக்கை எடுத்துள்ளது.  

ஹிந்தி நடிகர்கள் பக்கத்திலிருந்து    இது  தொடர்பான ஏற்பாடுகளை     பொலிவூட் நடிகர்  சுனில் ஷெட்டி   மேற்கொண்டுவருகின்றார்.  இந்நிலையில்  இது  தொடர்பான ஆரம்பகட்ட  பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில்   இலங்கைக்கு வருகை தந்திருந்த  பொலிவூட் நடிகர் சுனில் ஷெட்டி நேற்று  கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்  ஊடகவியலாளர்களை சந்தித்து  கலந்துரையாடியபோதே  மேற்கண்ட கூற்றை வெளியிட்டார். 

நடிகர் சுனில் ஷெட்டி இங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில் 

இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் மிகச்சிறந்த உறவு காணப்படுகின்றது. அந்த உறவு மேலும் வலுவடையவேண்டும்.     எனக்கு இலங்கையை  மிகவும்  பிடிக்கும்.   இதனை   நான்  வெறுமனே கூறவில்லை. மாறாக   எனது மனதில் தோன்றுவதை கூறுகின்றேன். 

இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள். அவர்களின் உபசரிப்பு அபரிதமானது.  நான் இங்கு  தனியே  வரும்போது  எனது மனைவி என்னுடன்   கோபித்துக்கொள்வார்.  தன்னையும் இலங்கைக்கு அழைத்துசெல்லும்படி கூறுவார். அந்தளவுக்கு அவரும்  இலங்கையை  நேசிக்கின்றார். 

இலங்கையுடன் எமக்கு நீண்டகால உறவு காணப்படுகின்றது. ஒருமுறை சிங்கர் கிண்ணத்துக்கான  கிரிக்கட் போட்டி நடத்தப்பட்டபோது நான்  வர்த்தக தூதுவராக இலங்கைக்கு வந்திருந்தேன்.   இலங்கைக்கும் இந்தியாவுககும் இடையிலான உறவு  இந்தளவு  வலுவடைந்ததில்  கிரிக்கட் பாரிய பங்களிப்பு   செய்துள்ளது. 

கேள்வி இந்த நட்சத்திர கிரிக்கெட்  போட்டியில் எத்தனை  ஹிந்தி நடிகர்கள் கலந்துகொள்வார்கள்? 

பதில்  15  நடிகர்கள் அளவில் கலந்துகொள்வார்கள். அதற்கான தெரிவு தற்போது இடம்பெற்றுவருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் ஜனரஞ்சயமாக அமையும். 

கேள்வி இலங்கை இந்திய உறவின் விழுமியத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் ? 

பதில் : இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான உறவின் பெறுமதியானது மிகவும் வலுவானது. இரண்டு நாடுகளுக்குமிடையில் பல்வேறு இரு தரப்பு தொடர்புகள் காணப்படுகின்றன. வர்த்தகம் கலாசாரம், விளையாட்டு என இவற்றை பட்டியலிட்டு செல்லலாம். இந்த உறவு மேலும் வலுவடைய வேண்டும். 

கேள்வி : எதிர்வரும் காலங்களில் உங்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புக்களை இலங்கையில் நடத்த திட்டமுள்ளதா ? 

பதில்: அதற்கான ஆரம்பத்தையே தற்போது செய்கின்றோம். அதற்காகத்தான் இவை அனைத்தையும் முன்னெடுக்கின்றோம் என்று கூற முடியும். இலங்கை மிகவும் அழகான நாடாகும். இலங்கையில் கால்பதித்து எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் அழகான காட்சிகளே தெரிகின்றன. எனவே இங்கு படப்பிடிப்புகளை நடத்துவது எமது விருப்பத்திற்குரிய தெரிவாகவுள்ளது. 

கேள்வி : 2010 ஆம் ஆண்டு இலங்கையில் ஹைபா விழா நடைபெற்றது. இது வெற்றியடைந்ததா? 

பதில் இலங்கையில் நடைபெற்ற ஹைபா விழாவானது பாரிய வெற்றியடைந்த விழா என்று கூற முடியும். உண்மையில் அதுதான் எமது இந்த செயற்பாட்டிற்கான ஒரு ஆரம்பமாக அமைந்தது. அது அனைவரையும் கவர்ந்த ஒரு விழாவாக அமைந்தது. 

கேள்வி :ஏன் நடிப்பு துறையை தெரிவு செய்தீர்கள் ?

பதில் : நான் கிரிக்கட் விளையாடுவதில் ஆர்வம் காட்டினேன்.  உள்ளூர் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு விளையாடியிருக்கின்றேன். எனினும் இந்தியாவின் தேசிய அணியில் இடம்பெறும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லாமல் இருந்திருக்கலாம். எப்படியோ என்னால் கிரிக்கட்டில் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் நடிகனாகிவிட்டேன். தற்போது 26 வருடங்களாக நடிப்பு துறையில் இருக்கின்றேன். 

கேள்வி :தமிழ் சினிமா தொடர்பில் உங்களுடைய பார்வை என்ன ?

பதில் : திறமையான நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கலைஞர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். நான்கூட 12 பீ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தேன். தமிழ் சினிமா என்பது மிகப்பெரிய துறையாக காணப்படுகிறது. இந்தி சினிமாத்துறையை விட தமிழ் சினிமா சினிமாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. 

கேள்வி : இலங்கைக்கு எத்தனை தடவை விஜயம் செய்துள்ளீர்கள் ?

பதில் : இது எனது ஏழாவது விஜயமாகும். உண்மையில் இலங்கையை எனக்கு மிக அதிகமாகவே பிடிக்கும்.