மலேஷியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

மலேஷியாவின் ஜோகூர் மாகாணத்திலுள்ள பசிர் குடங் நகர் தொழில்துறை நகரமாக விளங்குகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அங்குள்ள கிம்கிம் என்ற ஆற்றில் இரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் இருந்து நச்சுவாயு வெளியேறி அதனை சுவாசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், பசிர் குடங் நகரிலுள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால்  உடனடியாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நச்சுக்காற்றை சுவாசித்ததே மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பசிர் குடங் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஒரு வார காலத்துக்கு மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.