(எம்.மனோசித்ரா)

நாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது. இதனை நோக்காகக் கொண்டு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அரச கரும மொழிகள் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். 

அரச கரும மொழிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் உள்ளன. இந்த மூன்று மொழிகளுமே மொழிக் கொள்கை சட்டத்திற்குள் உள்ளடங்குகின்றன. 

அதற்கிணங்க நாட்டில் அரச காரியாலயங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மும்மொழிகளிலும் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, எந்தவொரு அரச சேவை நிறுவனத்திற்கும் சென்று அனைத்து மொழிகளிலும் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் பதிலைப் பெற்றுக் கொள்ளக் கூடிய உரிமை காணப்படுகின்றது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் கூட அந்த இலக்கை அடையக் கூடியதாகவுள்ளது. மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரிய பிரச்சினையாக தோற்றம் பெறாது என்றும் குறிப்பிட்டார்.