கிரிந்த கடலில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த தந்தை மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோரின் இறுதி சடங்குகள் இன்று மாலை ஹட்டன் குடாகம பொது மயானத்தில் இடம்பெற்றன.

ஹம்பாந்தோட்டை கிரிந்த - யால கடலில் நீராடச் சென்றபோது, நீரில் இழுத்துச் செல்லப்பட்டு தந்தையும், அவரது இரண்டு பெண் பிள்ளைகளும் பலியாகினர்.

இதேநேரம், தாய் பாதிக்கப்பட்ட நிலையில், தெபரவெவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஹட்டன் நகர பகுதியை சேர்ந்த குறித்த குடும்பத்தினர், யால பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், யால கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த அவர்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இதன்போது, தந்தையும், புதல்வி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தாயும், மற்றுமொரு மகளும் மீட்கப்பட்ட நிலையில் தெபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இந்த நிலையில், சிகிச்சைபெற்றுவந்த மகளும் உயிரிழந்துள்ளார்.

நான்கரை மற்றும் ஆறு வயது பெண் பிள்ளைகளே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.