(செ.தேன்மொழி)

தொலைப்பேசி அழைப்புகளினூடாக தொடர்பு கொண்டு பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றதாக குறிப்பிடப்படும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல மற்றும் நவகமுவ பகுதிகளில் இவ்வாறு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தி கப்பம் கேட்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மிரிஹான விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுன. அதற்கமைய இன்று  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 31,44 ஆகிய வயதுகளையுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன். இதன்போது மோசடியில் ஈடுப்பட்டதாக குறிப்பிடப்படும் சந்தேக நபர் மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சந்தேக நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொலைப்பேசி அழைப்புகளினூடாக சில நபர்களை தொடர்பு கொண்டு அவர்களை அச்சுறுத்தி கப்பம் கோரியுள்ளதுடன், கப்ப பணத்தை வங்கி கணக்கின் மூலமும் , 'ஈசி கேஸ் "முறையிலும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.