திருகோணமலை-வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியரொருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில்   பிரதேச செயலாளரினால்  சேருநுவர பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்பேரில் ஏறாவூர் - பகுதியைச்சார்ந்த  40 வயதான ஒருவரே இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெருகல் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக தேசிய அடையாள அட்டை வழங்கும் பிரிவில் கடமையாற்றி வந்த இவர் ஈச்சிலம்பற்று - கறுக்காமுனை  பகுதியில் வசித்து வரும் சிவபாலன் சசிகலா என்ற பெண்ணிடம் 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக வெருகல் பிரதேச செயலாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு ஒன்றினை தெரிவித்தார்.

வெருகல் பிரதேச செயலாளர் எம் குணநாதன் உரியவரை சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடமிருந்து  2000 ரூபாய். லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதுடன் அருகில் உள்ள சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இன்றைய தினம் சந்தேகநபரை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.