இந்தியாவின் மும்பையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் தாய், மகன் ஆகியோரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கொலைச்சம்பவம் குறித்த முக்கிய குறிப்பு மடிக்கணிணியில் சிக்கியுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மும்பையைச் சேர்ந்த 42 வயதுடைய வைகண்டேஷ்வரன் மற்றும் அவரது தாயான 75 வயதுடைய மீனாட்சி ஐயர் ஆகிய இருவரும் மும்பையின் மீரா குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் கடந்த 4 நாட்களாக இல்லை.  

இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் இருவரும் வெளியூர் சென்றிருப்பார்கள் என நினைத்து இருந்துள்ளனர். பின்னர் மீனாட்சியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 

குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மீனாட்சி, வைகண்டேஷ்வரன் ஆகியோரின் சடலங்களைப் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

மீனாட்சியின் சடலம் குளியல் அறையில் ரத்தத்தில் மிதந்துள்ளது. மகனின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. இதையடுத்து இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பார்களா, அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்தனர். 

இந்நிலையில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்குமா என பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தியதில், வைகண்டேஷ்வரனின் மடிக்கணிணியில் குறிப்பு ஒன்று சிக்கியது. இதில், தாயை கொன்றுவிட்டு, தானே  தற்கொலை செய்து கொண்டதாக வைகண்டேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, வைகண்டேஷ்வரன் இவ்வாறு செய்ய காரணம் என்ன என்பதை விசாரித்து வருகின்றனர்.