மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான சாயல்குடி எஸ்.முருகநாதனுக்கு, தென்சென்னை தமிழ்ச்சங்கம் சார்பில் ‘கவித் திலகம்' விருது வழங்கப்பட்டது.

தென்சென்னை தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தென்சென்னை மக்கள் நல அறக்கட்டளையின் முப்பெரும் விழா, சென்னை அரும்பாக்கம் லீக் கிளப் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்ச்சங்கத்தின் தலைவர்  ஜீவரேகா அனைவரையும் வரவேற்று பேசினார். பத்திரிகையாளர்கள் ஆரூர் தமிழ்நாடன், மானா பாஸ்கரன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி, தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு மலரை வெளியிட்டார்.

இதில், முப்பெரும் தமிழறிஞர்களான உலகத்தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குனர் முனைவர் கா.மு.சேகர், பகிர்வு இலக்கிய அமைப்பின் தலைவர் முனைவர் தமிழ் மணவாளன் மற்றும் பேச்சாளர் ஆவடி குமார் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தொடர்ந்து, மூத்த பத்திரிகையாளரும், எழுச்சிக்கவிஞரும், பிரபல எழுத்தாளருமான முருகு சிவகுமார் (எ) சாயல்குடி எஸ்.முருகநாதனின் கவித்திறனையும், தமிழ்த்தொண்டு மற்றும் தமிழ் இலக்கிய சேவையையும் பாராட்டும் வகையில், அவருக்கு 'கவித் திலகம்'' விருது வழங்கப்பட்டது.

தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த விழாவுக்கு எஸ்.முருகநாதன் வர முடியாததால், அவருக்கான விருதை அவருடைய மூத்த மகன் பொறியாளர் எஸ்.எம்.கவிப்பிரமேஷிடம், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி வழங்கினார்.

அத்துடன், இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுகளும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வித்தகர்களுக்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை, தென்சென்னை மக்கள்நல அறக்கட்டளை மற்றும் தென்சென்னை தமிழ்ச்சங்கத் தலைவர்  ஜீவரேகா, செயலாளர் கவிஞர் கோகுலன் ஆனந்தா, பொருளாளர் கிருபாகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.