தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டபோது அதனை வழங்க மறுத்ததால் குறித்த நபர் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (24) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

63 வயதுடைய  சுபியான் என அறியப்படும்  நபரே இதன்போது கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில்  தெஹிவளை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.

குறித்த வர்த்தகர் உரங்கிக்கொன்டிருந்த போது, ஹார்ட்வெயாருக்குள் உள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கு  பணத்திருட்டில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதன்போது மேற்படி வர்த்தகர்  விழித்துக்கொண்டுள்ளார்.

இதன்போதே மர்ம நபர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படு காயமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர், உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள போதும், உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

இதனையடுத்து வர்த்தகர் கத்திக் குத்துக்கு இலக்காக முன்னர்,  அடையாளம் தெரியாத மர்ம நபருடன்  போராடியுள்ளதாகவும், அதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் கூறியதுடன் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி. பதிவுகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.