(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

எங்களுக்கு ஜனாதிபதியுடன் ஆரம்பத்தில் கோபம் இருந்திருக்கலாம். என்றாலும் இறுதியில் அவர் எமது தலைவரை பிரதமராக்கி எங்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கத்தை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியை விமர்சித்து வருகின்றது. ஆனால் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தற்போது ஏன் ஜனாதிபதியை விமர்சிக்கவேண்டும். 

அத்துடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும் என்று காட்டும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு பக்கத்தில் செயற்பட்டுவரும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சிலர் பத்திரிகையில், தாக்குதலுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூறவேண்டும் என தெரிவித்துவருகின்றனர். இவர்கள் திட்மிட்டு ஜனாதிபதியை இந்த விடயத்தில் சிக்கவைக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் தனது வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.