அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்

Published By: Priyatharshan

24 Jun, 2019 | 05:18 PM
image

-பி.கே.பாலச்சந்திரன்

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடங்கி பிறகு பதவிக்கு வந்த ஒவ்வொரு இலங்கை ஜனாதிபதியுமே மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதித் பதவியை இல்லாதொழித்து, பிரிட்டிஷ் வெஸ்மினிஸ்டர் பாணியிலான – பாராளுமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்ற ஆட்சிமுறையொன்றை மீண்டும் ஏற்படுத்துவதாக உறுதியளித்துக்கொண்டே ஆட்சியதிகாரத்திற்கு வந்தனர். ஆனால் அதே ஜனாதிபதிகள் (திருமதி குமாரதுங்க உட்பட) அதிகாரத்தைக் கைவிடத் தவறியது மாத்திரமல்ல, ஏற்கனவே காணப்படுவதை விட மேலதிகமான அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெறுவதிலும் நாட்டம்காட்டி வந்திருக்கிறார்கள்.

அண்மையில் வெளியாகியிருக்கும் செய்திகளின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருட இறுதியில் நடத்தப்பட வேண்டியிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகப் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா என்பதை மக்களிடம் கேட்பதற்காக சர்வசன வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிடுகிறார். 

இது ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார்.  ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் கூட்டுஎதிரணி கர்ணகொடூரமான எதிர்க்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட்டு, பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கான சிறிசேனவின் பிரயத்தனத்தின் பின்னணி ஜனாதிபதியா இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகத் தனது அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களை அடுத்த சில மாதங்களுக்கு நிறைவேற்றக்கூடிய பிரதமரையும், தன்னால் எளிதில் கையாளக்கூடிய பாராளுமன்றம் ஒன்றையும் கொண்டிருக்க வேண்டும் விருப்பமேயாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியினாலும், அதன் நேச அணிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற பாராளுமன்றத்துடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையுடனும் ஜனாதிபதி சிறிசேன இப்போது பல மாதங்களாக முட்டி மோதிக்கொண்டேயிருக்கிறார். இரு தரப்பிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலை அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பானதாக இருக்கின்றது. இறுதியாக ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே ஏற்பட்டிரு;ககும் முறுகல் நிலைக்குக் காரணம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவாகும். அந்தத் தெரிவுக்குழுவின் அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டு உடனுக்குடனாகப் பகிரங்கப்படுத்தப்படுவது சிறிசேனவிற்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கின்ற உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளில் பலரும் பாதுகாப்புத் துறையிலுள்ள குறைபாடுகளுக்காக ஜனாதிபதி சிறிசேனவைக் குற்றஞ்சுமத்தியிருப்பதையும், பகிரங்க விசாரணைகளின் மூலமாக முக்கிய அரச இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுவதையும் தனக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகளாகப் பாரக்கும் அவர், தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். தெரிவுக்குழு தொடர்ந்து செயற்படுமாக இருந்தால் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என்றும் கூட ஜனாதிபதி அச்சுறுத்தியிருந்தார். இம்மாதம் 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற வேண்டிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டாமலேயே ஜனாதிபதி வெளிநாடு சென்றார்.

மறுபுறத்தில் தெரிவுக்குழுவை அமைப்பதென்பது பாராளுமன்றத்திற்குரிய சிறப்புரிமை என்பதால் அந்தக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோருவதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பாராளுமன்ற சபாநாயகர் கரூ ஜயசூரிய வாதிட்டார். அத்துடுன் தெரிவுக்குழு முன்பாக வந்து சாட்சியம் அளிப்பதிலிருந்து அதிகாரிகளை ஜனாதிபதியால் தடுக்கவும் முடியாது. எனவே சகாநாயகர் வழமை போன்று தெரிவுக்குழு, அதன் செயற்பாடுகளை தொடர்வதற்கு அனுமதித்தார்.

இந்த சர்ச்சையில் ஜனாதிபதியினாலும், சபாநாயகராலும் அடுத்து முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் ஜனாதிபதி தஜிகிஸ்தானிலிருந்தும், பிரதமர் விக்கிரமசிங்க சிங்கப்பூரிலிருந்தும் நாடு திரும்பிய பின்னர் மாத்திரமே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமையில் மாற்றத்தைக் காணக்கூடியதாக இல்லை. இந்த சர்ச்சைக்கு சில தினங்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடியொன்று தோன்றக்கூடிய ஆபத்தும் இருந்தது. வழமைப் பிரகாரம் செவ்வாய்கிழமைகளில் அமைச்சரவை கூட்டப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் நேருமென்று கூட்டுஎதிரணி எம்.பி ரோஹித அபேகுணவர்தன ஏற்கனNவு எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தயாசிறியின் கோரிக்கை

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு மாதங்களினால் நீடிப்பது தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்கப்போவதாக அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜனசேகர ஏப்ரல்மாத ஆரம்பத்தில் கூறியிருந்தார். சட்டரீதியான அடிப்படையில் ஜயசேகர ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் முடிவு குறித்துக் கருத்தைக் கூறியிருந்தாலும் கூட, ஜனாதிபதி சிறிசேன தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்து இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியாகவே மேலும் ஆறுமாத காலத்திற்குப் பதவியில் நீடிக்க விரும்புகிறார் என்பது வெளிப்படையானது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான நோக்கம் தொடர்பில் சட்ட வியாக்கியானளம் ஒன்றைச் செய்த ஜயசேகர பின்வருமாறு கூறினார்:

'ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்று உச்சநீதிமன்றத்திடம் ஏற்கனவே கேட்கப்பட்டது. அப்போது பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த ஐந்து வருட பதவிக்காலம் என்போது தொடங்குகிறது, எப்போது முடிவடைகிறது என்பதே இப்போதுள்ள பிரச்சினையாகும். ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் சபாநாயகர் அதில் கையெழுத்திட்டு, அங்கீகாரம் வழங்கிய பின்னர் மாத்திரமே அது நடைமுறைக்கு வருகிறது என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச்சட்டமூலம் 2015 மே மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதில் சபாநாயகர் 2015 ஜுன் 22 ஆம் திகதியே கைச்சாத்திட்டார். எனவே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜுன் 22 ஆம் திகதியிலிருந்தே நடைமுறைக்கு வந்தது. ஆதலால் ஜனாதிபதி சிறிசேனவின் 5 வருட பதவிக்காலம் 2015 ஜுன் 22 ஆம் திகதியே தொடங்கி, 2020 ஜுன் மாதமே முடிவடைய வேண்டுமேயன்றி, 2019 டிசம்பரில் அல்ல.

மேலும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முன்னதாக 6 வருட பதவிக்காலத்திற்காக சிறிசேன 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். 19 ஆவது திருத்தச்சட்டத்தைப் பின்நோக்கிய காலகட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. ஆகையால் அந்தத் திருத்தச்சட்டம் ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலத்தைப் பொறுத்தவரை பிரயோகிக்கப்படலாகாது. ஏனென்றால் அவர் அந்தத் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்" - இது ஜயசேகரவின் வாதம். 

ஆனால் இதுவிடயத்தில் உச்சநீதிமன்றத்தை அவர்கள் நாடவில்லை. 250 இற்கும் மேற்பட்டோரைப் பலியெடுத்த ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் தோற்றுவிக்கப்பட்ட குழப்பநிலை, பதட்டம் மற்றும் உறுதிப்பாடு என்பன இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அக்டோபர் 26 சதி முயற்சி

2018 அக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு, அவரின் இடத்திற்கு கூட்டுஎதிரணியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். அவ்வாறு செய்ததன் மூலம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை அவர் அவமதித்தார். பிரதமருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும்வரை அவரைப் பதவி நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று அந்தத் திருத்தச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது. பிரதமர் பதவி விலகும் பட்சத்தில் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமற்போகும் பட்சத்திலேயே அவர் பதவி இழக்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பெரும் பின்னடைவைக் கண்ட ஜனாதிபதி சிறிசேன பிரதமராக மீண்டும் விக்கிரமசிங்கவை நியமித்தார். பிரதமரினால்சிபாரிசு செய்யப்படாத பட்சத்தில் ஜனாதிபதியினால் அமைச்சர்களைப் பதவி நீக்கமுடியாது என்றும், அரசுக்கு எதிராக நம்பிக்;கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்படும் பட்சத்தில் அல்லது வரவு, செலவுத்திட்டம் அல்லது அரசாங்கதத்தின் கொள்கைப் பிரகடன உரை ஒன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் வரை அமைச்சரவை தொடர்ந்து பதவியிலிருக்கும் என்று 19 ஆவது திருத்தம் கூறுகிறது.

பதவிக்கால நீடிப்புக்கு ராஜபக்ஷ மேற்கொள்ள முயற்சி

2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏப்ரலில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த வருடம் செப்டெம்பரில் அரசியலமைப்புக்கான 18 ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். ஜனாதிபதியொருவர் ஒரு பதவிக்காலத்திற்கே ஆட்சியதிகாரத்தில் இருக்கமுடியும் என்ற வரையறையை இல்லாமற்செய்து 2016 இல் நடத்தப்பட வேண்டியிருந்த அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் 3 ஆவது பதவிக்காலத்திற்குத் தான் போட்டியிடுவதற்கு வசதியாகவே அந்தத் திருத்தச்சட்டத்தை அவர் கொண்டுவந்தார். 

ஆனால் உரிய காலத்திற்கு முன்கூட்டியே 2015 ஜனவரியில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலிலும், அடுத்து 2015 ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். ஜனாதிபதி சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான புதிய அரசாங்கம் 2015 ஜுன் மாதத்தில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அந்தத் திருத்தம் ஜனாதிபதிக்கு இருந்த இருவருடப் பதவிக்கால மட்டுப்பாட்டை இல்லாமற்செய்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகவும் குறைத்தது. 

ராஜபக்ஷ குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பின்நோக்கிய காலகட்டத்திற்குப் பிரயோகிக்கப்பட முடியாது என்பதால் இருவருட பதவிக்கால வரையறையை ராஜபக்ஷவுக்குப் பிரயோகிக்க முடியாது என்று இப்போது வாதிடுகிறார்கள். ஆனால், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருக்கின்ற பதவிக்கால மட்டுப்பாடு தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகிறது. ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியே தவிர தற்போது ஜனாதிபதிப் பதவியில் இல்லை.

திருமதி குமாதுங்கவின் பதவிக்கால நீடிப்பு முயற்சி 

ராஜபக்ஷவுக்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த திருமதி.குமாரதுங்க 2005 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தை ஒரு வருடத்தினால் நீடித்துக்கொள்வதற்கு முயற்சித்தார். 1999 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தினத்தில் அல்ல, ஆனால் முதலாவது 6 வருடப் பதவிக்காலம் முடிவடைகின்ற 2006 டிசம்பரிலேயே தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்குகின்றது என்ற வாதத்தின் அடிப்படையிலேயே அந்த முயற்சியை மேற்கொண்டார்.

1994 நவம்பரில் முதற்தடவையாக ஒரு 6 வருட பதவிக்காலத்திற்கு திருமதி குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இந்தப் பதவிக்காலம் 2000 நவம்பரில் முடிவடையுமே தவிர, 1999 நவம்பரில் அல்ல. தனது இரண்டாவது பதவிக்காலம் 2000 நவம்பரில் தொடங்குகிறது என்று காட்டுவதற்காக இரண்டாவது பதவிப்பிரமாண வைபவமொன்றில் அவர் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.

ஆனால் ராஜபக்ஷ அதை எதிர்த்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் சார்பில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் திருமதி குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலம் 2006 அல்ல. 2005 நவம்பரிலேயே முடிவடையும் என்று தீர்ப்பளித்தது.

பாராளுமன்றப் பதவிக்காலத்தை நீடித்த ஜே.ஆர்.ஜெயவர்தன

ஜனாதிபதி ஜெயவர்தன 1977 ஜுலையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தைக் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தாமல் ஒரு ஆறுவருட காலத்திற்கு 1988 வரை நீடிப்பதற்கு 1982 டிசம்பர் 12 ஆம் திகதி நாடளாவிய சர்வசன வாக்கெடுப்பொன்றை நடத்தினார். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நக்சலைட் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாகக் கூறிக்கொண்ட ஜெயவர்தன, அந்த ஆபத்தை முறியடிப்பதற்கு அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய ஆற்றலுக்குப் புதிய பொதுத்தேர்தல் ஒன்று தடையாக இருக்குமென்றும், தனது புதிய திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்க முடியாமற்போகும் என்றும் காரணம் கூறியே அவர் அந்த சர்வசன வாக்கெடுப்பை நடத்தினார்.

1977 ஜுலையில் தெரிவு செய்யப்பட்ட அந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 1983 ஆகஸ்டில் முடிவடைய இருந்தது. ஆனால் 1988 அக்டோபரில் ஜெயவர்தன கலைக்கும் வரை அந்தப் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடித்தது.

சர்வசன வாக்கெடுப்பின் போது படுமோசமான வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோசடிகளும் இடம்பெற்றன. ஆனால் ஜெயவர்தன கூடுதல் அதிகாரத்தை அபகரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் அவரைப் போலன்றி அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தங்களது அதிகாரங்களையும், சிறப்புரிமைகளையும் விஸ்தரித்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளில் பரிதாபகரமாகத் தோல்விகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(நியூஸ் இன் ஏஸியா )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13