வீ.தனபாலசிங்கம்

கடந்த வாரம் இரு தலைவர்கள் நமது அரசியல்வாதிகளைப் பற்றி படுகேவலமாகப் பேசியிருந்தார்கள். ஒருவர் நாட்டின் தலைவர். மற்றவர் வேடுவர் தலைவர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலவில்  கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையொன்றுக்கான  புதிய மூன்றுமாடி கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டுவைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அரசியல்வாதிகள் பற்றிய தனது ' மதிப்பீட்டை ' வெளியிட்டார்.

" இலங்கை அரசியல்வாதிகளில் 90 சதவீதமானவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள்.அதேவேளை, 60 வீதமானவர்கள் கீழ்த்தரமானவர்கள்.சமுதாயத்தின் சகல தரப்பினர் மத்தியிலும் படுமோசமான பிரிவினராக அரசியல்வாதிகளே இருக்கிறார்கள்.10 சதவீதமான அரசியல்வாதிகளே அரசியலில் ஈடுபடுவதற்கு பெறுமதியானவர்களாக இருக்கிறார்கள்.அரசியல்வாதிகளுடன் பணியாற்றுகின்ற அரசாங்க அதிகாரிகளும் ஊழல்தனமானவர்களாக மாறிவிடுகிறார்கள் " என்று ஜனாதிபதி சிறிசேன தனதுரையில் குறிப்பிட்டார்.

     

ஜனாதிபதி இந்த வீதக்கணக்கில் தன்னை 10 சதவீதப் பிரிவுக்குள் மக்கள்  வைப்பார்கள் என்றுதான்  நம்புகிறார்போலும். ஆனால், மக்களுக்கென்று ஒரு மதிப்பீடு இருக்கிறது.அண்மைக்காலமாக அரசியல் நிலைவரங்களையும் அரசியல்வாதிகளின் நடத்தைகளையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது  அரசியலில் ஈடுபடுவதற்கு தகுதியானவர்கள் என்று வகைப்படுத்தக்கூடியவர்கள் நிச்சயமாக 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பர்  என்றே எண்ணவேண்டியிருக்கிறது.

         

வேடுவர் தலைவர் உறுவாரிகே வன்னியாலே அத்தோ அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லியிருப்பதை பார்ப்போம். தனது 72 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர் தம்பனவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இலங்கை அரசியல் முடைநாற்றமெடுக்கிறது என்றும் அப்பாவி மக்களைப் பலிகொண்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு பாலர் பாடசாலை சிறார்கள் போன்று நடந்துகொள்ளும் ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

     

" என்னைச் சந்திக்கவருகின்ற சிலர்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறார்கள்.ஆனால், அந்த கழிவுத்தொட்டிக்குள் விழுவதற்கு நான் விரும்பவில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு அவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுக்கும்போது தேர்தலில் போட்டியிட்டு நாட்டுக்கு சரியான பாதையைக் காட்டினால் என்ன என்று சில சந்தர்ப்பங்களில் நான்நினைப்பதுண்டு. ஆனால், மறுகணம் அந்த சகதிக்குள் விழுந்து என்னை நானே நிர்மூலம் செய்துவிடக்கூடாது என்று பின்வாங்கிவிடுவேன். நாடு எதிர்நோக்குகின்ற நெருக்கடிநிலையைப்  பற்றி கவலைப்படாமல் அரசியல்வாதிகள் ஒருவரை மற்றவர் மாறிமாறி குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மீது விரக்தியடைந்திருக்கும் மக்கள் அவர்களை நோக்கி கூச்சல் போட்டு விரடடும் பல சம்பவங்களை நான் கண்டிருக்கிறேன். தற்போதைய கட்சி அரசியல் மாச்சரியங்களைப் பார்க்கும்போது  அரசியல்வாதிகளின் இரத்தம் சிவப்பாக இல்லாமல் நீலமாகவும் பச்சையாகவும் இருக்கிறதோ என்று மக்கள் கேலி செய்கிறார்கள் " என்று சுதேசிகளின் தலைவர் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நாட்டுக்கு சரியான பாதையைக் காட்டுவதற்காக அரசியலில் இறங்கினால் என்று சில சந்தர்ப்பங்களில் நினைப்பதாகவும் னால், தன்னைத் தானே நிர்மூலம் செய்துவிடக்கூடாது என்று உணர்ந்து அந்த யோசனையை உடனேயே கைவிட்டுவிடுவதாகவும்  வேடுவ சமூகத்தின் தலைவர் கூறுகிறார் என்றால் எமது அரசியல்வாதிகளின் செயற்பாடுகளைப் பற்றி அவருக்கு இருக்கின்ற தெளிவின் ' இலட்சணத்தை ' தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

 உறுவாரிகே வன்னியாலே அத்தோ அரசியல் நிலைவரம் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் இறுதியாகக் கூறியிருக்கும் இந்த கருத்துக்கள் அவர் சில வருடங்களுக்கு முன்னர்  பாராளுமன்றத்துக்கு வந்து சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்து சபை நிகழ்வுகளைப் பார்வையிட்ட சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் அப்போது  வெளியான செய்திகளை இச்சந்தர்ப்பத்தில் தவிர்க்கமுடியாதவகையில் நினைவுபடுத்துகின்றன.

வேடுவர் தலைவரின் பாராளுமன்ற வருகை குறித்துசில சிங்கள,  ஆங்கிலப் பத்திரிகைகள் கேலிச்சித்திரத்தை பிரசுரித்ததுடன் ஆசிரிய தலையங்கத்தையும் தீட்டியிருந்தன. அவை சகலதுமே எமது அரசியல்வாதிகளை படுமோசமாக ஏளனம் செய்பவையாகவே அமைந்திருந்தன. 

அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு வேடுவர் தலைவருக்கு எதுவுமேயில்லை. அவரிடமிருந்து அரசியல்வாதிகள் தான் நல்ல நடத்தைகளையும் தலைமைத்துவப் பண்புகளையும் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.எதற்காக இந்த பண்பான மனிதர் பாராளுமன்றத்துக்கு வந்தார் என்று கொழும்பு  ஆங்கிலப் பத்திரிகையொன்று கேள்வியெழுப்பியிருந்தது.

தனது மக்களைச் சுரண்டாமல் அவர்களை அமைதியாக வழிநடத்திச்செல்லும் அத்தோவும் அவரது சமூகமும் வனவிலங்குகளை விடவும் மோசமான ' ஜீவராசிகள் ' நிறைந்த அரசியலுக்குள் பிரவேசிக்கக்கூடாது.அவர் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பழகுவதையும் அரசியல் நிறுவனங்களுக்கு விஜயம் செய்வதையும் எவரும் உற்சாகப்படுத்தக்கூடாது.அவ்வாறு வேடுவர் தலைவர் பழகுவாரேயானால், வேடுவர்களை முப்பத்து முக்கோடி தேவர்களினாலும் கூட காப்பாற்றமுடியாது போய்விடும்  என்றும் அந்த ஆங்கிலப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

எந்தவிதமான ஒழுக்கநியாயப் பண்புமே இல்லாத ஒரு கூட்டத்தினராகவே பெரும்பாலான அரசியல்வாதிகளை சமூகம் நோக்குகிறது.ஆனால், அவர்கள் அது குறித்தும் கிஞ்சித்தும் வெட்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.கசிப்புக்கும் போதைப்பொருளுக்கும் அடிமையானவர்கள் பின்னர் அவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதையே தொழிலாகக்கொண்டு பெரும் பணம் சம்பாதித்து இறுதியில் பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள் என்று சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு தடவை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் குறிப்பிட்டதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

எளிதாகவும் விரைவாகவும் பணம் பண்ணுவதற்கான ஒரு துறையாக அரசியல் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், அரசியல்வாதிகள் இன்று கொள்கை கோட்பாடுகளைப் பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறைப்படுவதில்லை.குறைந்த பட்சம் தனிமனித ஒழுக்கத்தையாவது கடைப்பிடிக்கவேண்டும் என்ற அக்கறை கூட அவர்களுக்கு இல்லை.சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களும் நெறிமுறைக்குப்புறம்பான வழியில் பெரும் சொத்துக்களைக் குவித்து தனவந்தர்களாகிக்கொண்டவர்களும் நிறைந்ததாக இன்று அரசியல் சமுதாயம் காணப்படுகிறது.

இலங்கை மக்கள் சுமார் 9 தசாப்தங்களாக சர்வஜனவாக்குரிமையை அனுபவித்துவருகிறார்கள். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் கடந்த நூற்றாண்டின் முற்கூறில் அரசியல் சீர்திருத்தங்களின் கீழ் சர்வஜனவாக்குரிமையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டபோது  சேர் பொன்.இராமநாதன் போன்றவர்கள் அதை எதிர்த்தார்கள்.சர்வஜனவாக்குரிமை வழங்கப்பட்டால் காடையர் கூட்டத்தின் ஆட்சிக்கே அது வழிவகுக்கும் என்பதே அவர்கள் தங்கள் எதிர்ப்பை நியாயப்படுத்துவதற்கு முன்வைத்த வாதமாகும். அந்த வாதத்தை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் இன்றைய அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது இராமநாதன் நியாயப்படுத்தப்பட்டு நிற்பதையல்லவா காண்கிறோம்.