தலைவிரித்தாடும் வேலையில்லா பிரச்சினை

By Raam

03 May, 2016 | 10:13 AM
image

நாட்டின் பிரபலமான மாகாணசபை ஒன்றில் அலுவலக உதவியாளர்களுக்கான 40 வெற்றிடங்கள் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களிலிருந்து இந்த அலுவலக உதவியாளர் பதவிக்கு 9460 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரிகளில் 250 விண்ணப்பதாரிகள் பட்டதாரிகள் என்பது ஒரு அதிர்ச்சிகரமான தகவலாக பதிவாகியுள்ளது.

அதுமட்டுமன்றி அலுவலக உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பொருளாதாரத் துறையில் விசேட பட்டம் பெற்றவராக காணப்படுகின்றமையானது நாட்டின் தொழிலின்மை வீதம் எந்தளவு தூரம் தலைவிரித்தாடுகின்றது என்பதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

அதாவது நாட்டின் தொழிலின்மை வீதமானது எந்தளவு தூரத்திற்கு உயர்ந்து காணப்படுகின்றது என்பதற்கும் தொழிலின்மையினால் படித்து பட்டம் பெற்றவர்கள்கூட எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு உதாரணமாக இந்த விடயம் காணப்படுகிறது.

அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு தொழிலின்மை வீதமானது 4.6 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் வேலையின்மை வீதமானது 4.3 வீதமாக இருந்த நிலையில் கடந்த வருடம் 0.3 வீதத்தினால் அதிகரித்துள்ளமை மத்திய வங்கியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்ததன் காரணமாகவே தொழிலின்மை வீதம் 0.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு பெண்களின் தொழிலின்மை வீதமானது 6.5 வீதத்திலிருந்து 7.6 வீதமாக உயர்வடைந்துள்ளது. ஆனால் ஆண்களின் தொழிலின்மை வீதமானது 3.1 வீதத்திலிருந்து 2015 ஆம் ஆண்டில் 3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்தவகையில் 2015 ஆம் ஆண்டில் தொழிலின்மை வீதமானது 0.3 வீதத்தால் அதிகரிப்பதற்கு பெண்களின் தொழிலின்மை வீதம் 1.1 வீதத்தால் அதிகரித்தமை பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி இளைஞர்களுக்கிடையிலான தொழிலின்மை வீதமும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் நாட்டின் தொழிற்படையானது 53.3 வீதமாக காணப் பட்டபோதும் 2015 ஆம் ஆண்டில் 53.8 வீதமாக தொழிற்படை அதிகரித்துள்ளது. கிராமிய துறை பெண்கள் அதிகளவில் தொழிற்படையில் இணைந்து கொண் டமையே இதற்கு காரணம் என மத்திய வங்கி ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டில் தொழிற்படையின் உற்பத்தி திறன் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் 12.4 வீத வீழ்ச்சி கடந்த வருடம் பதிவாகியுள்ளது. இந்த காரணமும் தொழிலின்மை வீதம் 0.3 வீதத்தால் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க கடந்த சில வருடங்களின் வேலையின்மை வீதத்தை இங்கு ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

வருடம் தொழிலின்மை வீதம்

2008 5.4

2009 5.9

2010 4.9

2011 4.2

2012 4.9

2013 4.4

2014 4.3

2015 4.6

அந்தவகையில் 2008 ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் தொழிலின்மை வீதத்தை பார்க்கும்போது ஆரம்பத்தில் அதிகரித்து வந்துள்ளதுடன் பின்னர் குறைவடைந்து சென்று மீண்டும் கடந்த வருடத்தில் அதிகரித்து சென்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக 2014 ஆம் ஆண்டில் நாட்டின் தொழிற்படையனாது 53.3 வீதமாக பதிவாகியுள்ளது. அதாவது தொழிற்படையில் 8804548 பேர் இடம்பெற்றுள்னர். இதில் ஆண்கள் 5728383 என்ற எண்ணிக்கையிலும், பெண்கள் 3076165 என்ற எண்ணிக்கையிலும் இடம்பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்திலேயே சதவீதத்தின் அடிப்படையில் ஆண்கள் அதிகளவு எண்ணிக்கையானோர் தொழிற்படையில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளனர். இது இவ்வாறிருக்க தொழிற்படையில் விவசாயத்துறையில் 28.5 வீதமானோரும், கைத்தொழிற்துறையில் 26.5 வீதமானோரும் சேவைத்துறையில் 45 வீதமானோரும் பங்கெடுத்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க கடந்த 2014 ஆம் ஆண்டில் 4.3 வீதமாக பதிவாகியிருந்த தொழிலின்மை வீதத்தை வயது மட்டத்தில் பார்த்தால் 15 க்கும் 24 வயதிற்கும் உட்பட்டோர் 20.3 வீதமாக காணப்பட்டனர். இதுவே வயது மட்டத்தில் அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் வேலையின்மை வீதமானது கிளிநொச்சி மற்றும் கேகாலை மாவட்டங்களையே அதிகளவில் வாட்டி எடுத்துள்ளது என்று கூறலாம்.

2014 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தில் வேலையின்மை வீதமானது 7.8 வீதமாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7.6 வீதமாகவும், மாத்தறை மாவட்டத்தில் 6.9 வீதமாகவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6.7 வீதமாகவும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள நிலையிலும் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலிலும் தொழிலின்மை வீதமானது அதிகரிக்கும் என்பது இயல்பான விடயமாகும். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வீதமானது 4.8 வீதமாக பதிவாகியிருந்தது. எனவே பொருளாதார வளர்ச்சி வீதமானது குறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு வேலையின்மை வீதமும் அதிகரித்துள்ளதை இங்கு அவதானத்திற்கொள்ளவேண்டும்.

இந்நிலையில் தேசிய அரசாங்கமானது நாட்டின் தொழிலின்மை வீதத்தை குறைத்து புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தாகவேண்டும். விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் வேலையின்மை வீதமானது தலைவிரித்தாடுகின்றமையை காண முடிகின்றது. எனவே அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் திட்டங்களை உருவாக்கவேண்டும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை அதிகரித்து அப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். நாட்டில் புதிதாக 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிவருகின்றார். அது மட்டுமன்றி அதற்காக சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் பிரபலமான வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். இந்தத் தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்திருந்தனர். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின்போதும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவது குறித்து ஆராயப்பட்டிருந்தது.

அந்தவகையில் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது. இதன்மூலம் தொழில்வாய்ப்புக்கள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவில் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் காலங்களில் கல்விகற்றுவிட்டு தொழில்படையில் இணைந்துகொள்வதற்கு தயாராகும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் வகையில் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில் பொருளாதார நிபுணர்கள் திட்டங்களை வகுக்கவேண்டியது அவசியமாக காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right