இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிப்பி ஆற்றுப்பகுதியில் வைத்து ஒரு தொகுதி பாலை மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரத்தின் சாரதி ஒருவர் இன்று திங்கட்கிழமை(24) காலை இலுப்பக்கடவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலுப்பக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இலுப்பக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று திங்கட்கிழமை (24) காலை 5.30 மணியளவில் இலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன் போது உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட நிலையில்  ஒரு தொகுதி சீவப்பட்ட பாலை மரக்குற்றிகளை மீட்டுள்ளதோடு,குறித்த உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பாலை மரக்குற்றிகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பாலை மரக்குற்றிகள் இலுப்பக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினருடன் கலந்துரையாடியுள்ளார்.

  இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இலுப்பக்கடவை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.