(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது நான் மாத்திரமே அதற்கு எதிர்ப்பை வெளியிட்டேன். எனினும் அப்போது என்னை அறிவில்லாதவன் என்றும், இனவாதி என்றும் தூற்றினார்கள். ஆனால் இப்போது ஜனாதிபதியே 19 ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார். இருப்பினும் இனிமேல் அதனை நீக்குவதென்பது கடிமானதொரு காரியம். இது நாட்டிற்குப் பாதகமானது என்ற விடயத்தை ஜனாதிபதி 4 வருடங்களுக்கு முன்னரேயே சிந்தித்திருக்க வேண்டும் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார். 

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் சர்வாதிகாரத்தையும், 19 ஆவது திருத்தம் நிலையற்ற அரசாங்கத்தையுமே ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்விரு திருத்தங்களையும் இரத்துச் செய்தால் மாத்திமே மக்களாணையை மதிக்கும் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தார். எனவே அவரிடம் இதுகுறித்து வினவிய போதே இவ்வாறு பதிலளித்தார்.