உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான்  அணி ஏற்கனவே அரையிறுதிக்கான வாய்ப்பின‍ை இழந்து விட்ட நிலையில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் தென்னாபிரிக்கா அணியும் அந்த வாய்ப்பினை இழந்து விட்டது.

ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரானது கடந்த மே மாதம் 31 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

மொத்தமாக 10 கலந்துகொள்ளும் இத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒவ்வொரு போட்டிகளில் மோத வேண்டும். இறுதியில் புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதன்படி இதுவரை 30 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதில் ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் தோல்வியடைந்து அரையிறுதிக்கான வாய்ப்பினை ஏற்கனவே இழந்து விட்டது.

இந் நிலையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியுடான போட்டியில் தென்னாபிரிக்க அணி 49 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியின் மூலம் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பினை இழந்து விட்டது. 

இதுவரை 7 போட்டிகளை சந்தித்துள்ள தென்னாபிரிக்க அணி 5 இல் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 3 புள்ளிகளுடன் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை இலங்கை அணியானது அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டிய நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.