கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரியும், அங்கு  முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வலுசேர்க்கும் வகையில் சைவ மகா சபையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது 

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பேராட்டத்தில் ,  தமிழ் மக்களுக்க்கு ஒரு நீதி ஏனைய இனத்தருக்கு ஒரு நீதியா, வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும், வடக்கில்லை என்றால் கிழக்கிலை, கிழக்கிற்காக வடக்கு என்றும் துணை நிற்கும், அரசியல் வாதிகளே எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு கட்சி போதங்களை விட்டு ஒன்றியுங்கள், கிழக்கு உறவுகளுக்கான வடக்கின் குரல் ஓங்கி ஒலிக்கும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டக் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தென்கயிலை ஆதின அகத்தியர் அடிகளார் உரையாற்றுகையில்,

தமிழர் தாயகத்தின் கிழக்குப் பிரதேசத்தில் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாக இது சம்பந்தமாக கல்முனையிலே இது அகிம்ஷை வழியிலான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அகிம்ஷையைப் போதிக்கின்ற புத்தருடைய இந்த நாட்டிலே இதற்கான சரியான தீர்வுகள் இதுவரைக்கும் ஏன் வழங்கப்படவில்லை.

ஒரு நியாயமான கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற இந்தப் போராட்டத்தினை கவனத்தில் எடுக்காதது ஏன் என்பது எங்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது என்றார். 

மேலும், குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில், தென்கயிலை ஆதின அகத்தியர் அடிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.