ஒரு நாட்டின் முக்கிய சக்தியாக இளைஞர்கள் விளங்குகின்றார்கள். நாடு அவர்களை நம்பி இருக்கின்றது. இந்நிலையில் இளைஞர்களுக்குச் சரியான பாதையைக் காண்பித்து அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டியது அவசியமாகிறது.  பிழையான வழிகளில் பயணிக்கும் இளைஞர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். இளைஞர் அபிவிருத்தி என்பது நாட்டின் அபிவிருத்திக்கு வலுசேர்ப்பதாக அமையும். இந் நிலையில் மலையக இளைஞர்கள் தொடர்பில் நாம் சிந்திக்கின்றபோது இவர்களின் சக்தி பிழையான வழி களில் வீணடிக்கப்படுவதாகவும் அரசியல்வாதிகள் சுயஇலாபம் கருதி இவர்களைப் பயன்டுத்திவிட்டு பின்னர் கைகழுவி வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது. 

எனவே இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர் களின் முன்னேற்றத்துக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  

இளைஞர்கள் ஒரு சமூகத்தின், நாட்டின் அச்சாணியைப் போன்றவர்கள். இவர்களால் தேசம் செழுமை பெறுகின்றது. பல உலக வரலாறுகளைப் புரட்டிப்போட்ட பெருமை இவர்களுக்கு உள்ளது..  இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது தடவையாகவும் பதவியேற்றுள்ள நிலையில், இவரது வெற்றியின் பின்னணியில் இளைஞர் சக்தி அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் உலகளாவிய ரீதியில் பல தலை வர்களின் வெற்றிக்கும் இளைஞர்கள் தோள் கொடுத்திருக்கின்றார்கள். சில அராஜக  அரசாங்கங்களை இளைஞர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள். ஜனநாயகம் சிறந்தோங்குவதற்கு வலிமை சேரத்திருக்கின்றார்கள். ஜனநாயகத்தின் காவலர்களாக விளங்கியிருக்கின்றார்கள். இன்னும் விளங்கி வருகின்றார்கள். இளைஞர்களைப் புறந்தள்ளும் எந்த ஒரு நாடோ அல்லது சமூகமோ எழுச்சி பெற்றதாக சரித்திரமே கிடையாது. இளைஞர்களின் தேவைகள கணக்கிலெடுக்கப்பட்டு அவற்றை உரியவாறு தீர்த்துவைக்க ஆட்சியாளர்கள் முற்படுதல் வேண்டும். இல்லையேல் முடிவு ஆபத்தானதே.. இதேவேளை, சமூகத்தின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது புறக்கணிப்பினை மேற்கொண்டதன் விளைவாக அச்சமூகம் சார் இளைஞர்கள் பொங்கி எழுந்த வரலாறு உலகளாவிய ரீதியில் அதிகமாகவே உள்ளது.

இதனால் மேலெழுந்த விபரீதங்களும் அதிகமாகவே உள்ளன. இரத்த ஆறு ஓடிய நிலையில் அபிவிருத்தியும் பின்தள்ளப்பட்டது. இளைஞர் வலிமையை எவரும் குறைத்து மதிப்பிடலாகாது. அவ்வாறு குறைத்து மதிப்பிடுவோருக்குத் தகுந்த பாடத்தை இளைஞர்கள் புகட்டியிருக்கின்றார்கள். நாட்டை, அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்தும் இருக்கின்றார்கள். எந்த நிலை யிலும் இளைஞர்களை கைகழுவி விடு வதற்கு யாரும் எத்தனிக்கக்கூடாது என்பதை கடந்தகால வரலாறுகள் நன்றாக உணர்த்தியுள்ளன.

சரியான பாதை

ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட தீக் குச்சியைக்கொண்டு வீட்டையும் கொளுத்த முடியும்;விளக்கையும் ஏற்றமுடியும். ஆனால் விளக்கேற்றுவதையே உலகம் விரும்புகின்றது. இந்த வகையில் இளைஞர்களை நோக்குவோமானால் அவர்களைக் கொண்டு நன்மைகளையும் மேற்கொள்ளமுடியும். தீமைகளையும் மேற்கொள்ள முடியும். ஆனால் தீமைகளைப் புறந்தள்ளி நன்மையான விடயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து சரியான பாதையில் அவர்களை அழைத்துச் செல்வதே மேலானது. ஒருநாட்டின் அழிவுக்கும் ஆக்கத்திற்கும் இளைஞர்கள் எவ்வாறு உந்துசக்தியாக  அமைகின்றனர் என்பதனை புத்திஜீவிகள் பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி இருக்கின்றனர்.  இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதால் நாடு எதிர்கொள்ளும் அபாயத்தை ஆர்.எம். கல்ஹா  பின்வருமாறு வலியுறுத்துகின்றார்.: ”ஒரு நாட்டை அழிப்பதற்கு அணுஆயுதங்கள் தேவையில்லை. அந்நாட்டின் இளைஞரை போதைப்பொருளில் மாட்டிவிட்டால் நாடு முழுவதும் திக்கற்று துன்பத்தில் அல்லல்படும். பௌதிக அழிவுகளின் சிதைவுகளில் இருந்து ஒரு நாட்டைக் கட்டியெழுப்பலாம். ஆனால் உள ரீதியாக இளைஞர் அழிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு எவ்விதத்திலும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை என்று ஆழமாக வலியுறுத்துகின்றார் ஆர்.எம். கல்ஹா என் னும் பேராசிரியர்.

இளைஞர்கள் பிழையான முறையற்ற பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொள்வதால் முழுநாடும் கண்ணீர் வடிக்கும் நிலை மையை பேராசிரியர் கல்ஹா இங்கு தெளிவாகவே சுட்டிக்காட்டி இருக்கின்றார். ”இளைஞர்களுக்கு இது ஒரு பாடம். இளைஞர்கள் எப்போதும் நேர் வழியிலேயே செல்லவேண்டும். 

இந்த வேளையில் இன்னுமொரு விடயத்தையும் இங்கு சொல்லவேண்டி இருக்கின்றது. இலங்கையின் வடக்கில் உள்ள இளைஞர்களை போதைப் பொருளில் மாட்டிவிட்டு அவர்களின் ஆளுமையை அழிப்பதற்கும் உளரீதியாக அவர்களை அழித்து கூறுபோடுவதற்கும் இனவாதிகள் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இனவாதிகளின் இந்த தீய செயற்பாட்டிற்கு வடபகுதி இளைஞர்கள் இரையாகிவிடக்கூடாது என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

பிரச்சினைகள்

பிரச்சினைகள் என்பது எல்லா மட்டங் களிலும் காணப்படுகின்றது. இளைஞர்களும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. அவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கையில் காளைப்பருவத்தினரிடையே எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி தேசிய மதிப்பீடு ஒன்றில் பின்வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது:

சராசரியாக பெரும்பாலான காளைப் பருவத்தினர் புகைத்தல், மதுபானம் மற்றும் துர்ப்பழக்கத்துக்கான பொருட்களை சுமார் 14 தொடக்கம் 15 வரையான வயதுகளில் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக 2004 இல் வெளியான தேசிய மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கின்றது. பாலியல் நோய், போஷாக்கு, உள நெருக் கீடுகள், காதல், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் இளைஞர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இப்பிரச் சினைகளிலிருந்து இவர்கள் விடுபடுவதற்கு ஆலோசனை, வழிகாட்டல் என்பன மிகவும் அவசியமானவை. 

இலங்கை இளைஞர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக வேலையின்மையை புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இது தொடர்பாக மா. கருணாநிதி கருத்துகள் பலவற்றை முன்வைத்துள்ள நிலையில் ஆலோசனை, வழிகாட்டல் என்ப வற்றின் அவசியத்தையும் வலியுறுத்தி இருக்கின்றார். இளைஞர்களிடையே வேலையல்லாப் பிரச்சினை காணப்படும் நிலையில் இப்பிரச்சினை கற்றோர் மத்தியிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றது. தமது கல்வித் தகைமைக்கும் ஆற்றலுக்கும் அனுபவங்களுக்கும் பொருத்தமான தொழில் எதுவென்று இனங்காண்பதில் உள்ள பிரச்சினையே வேலையின்மைக்கான காரணமாகுமென்று வழிகாட்டல் ஆலோசகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலுக்கான தகைமை, அதற்கான சந்தர்ப்பம் குறிப்பிட்ட அத்தொழிலில் முன்னேறுவதற்கான விருப்பம், ஊக்கம் என்பன ஒருவரிடம் காணப்படும்போது அவருடைய ஆளுமை முழுமையாக வெளிப்படுவதற்கு சந்தர்ப்பமுண்டு. இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்விக்கும் தொழிலுக்குமான தொடர்புகள் குறைவாக உள்ளன. இங்கு வழங்கப்படும் கல்விக்கும் தொழில் வழங்குநரின் எதிர்பார்ப்புக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. பொருத்தமான தொழில்களைத் தேடுவதில் இளைஞர் மத்தியில் பிரச்சினைகள் உண்டாகின்றன. அத்தோடு அவர்கள் விரக்தி நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இவற்றின் வாயிலாக பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தொழிலுக்கு வழிகாட்டுதல் ஒரு முக்கிய விடயம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது என்கிறார் மா. கருணாநிதி. 

இளைஞர்களுக்கு மகிழ்ச்சியானதும் சுகமானதும் மற்றும் உற்பத்தித்திறனும் கொண்ட வாழ்க்கைக்குரிய சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணித்துச் செயற்படுகின்றது. இளைஞர்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், இளைஞர்களின் முழுமையான நலன்களை அபிவிருத்தி செய்வதற்கு உதவக்கூடிய சுற்றாடலை உருவாக்குதல், போஷாக்கை மேம்படுத்துதல் போன்ற விடயங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புகைத்தல், மதுபானம் மற்றும் ஏனைய மனநிலையினை மாற்றும் பொருட்கள் மக்கள் மத்தியில் துர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பாலான காரணமாக விபத்துகள், தற்கொலைகள், வன்செயல்கள், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் எயிட்ஸ் போன்றவை இளைஞர்களிடையே பரவும்நிலை ஏற்படுகின்றது. வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இவற்றை பாவிப்பதனால் அவர்களது வயது வந்ததன் பின்னரான வாழ்க்கையில் உடல் உள்ளுறுப்புகள் செயலிழப்பதற்குக் காரணமாக அமைகின்றது. இப்பொருட்கள் தீர் மானம் மேற்கொள்ளும் சக்தியையும் உடற் திறன்களையும் பெரிதும் பாதிக்கின்றன. அத்துடன் குறிப்பிடத்தக்க தொகையான இளம்ஆட்கள் புற்றுநோய், புண்கள், இருதயநோய், போஷாக்கின்மை மற்றும் ஏனைய நோய்களினால் பாதிக்கப்படும் ஆபத்து நிலையினையும் ஏற்படுத்துகின்றது. இதனை கருத்திற்கொண்ட அரசாங்கம் புகையிலை, மதுபானம் மற்றும் அத்தகைய பொருட்களைப்பற்றி எவ்வகையிலும் விளம்பரம் செய்யக்கூடாது என்பது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. 18 வயதுக்குக் குறைந்த இளம் ஆட்களுக்கு புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பதும் இதில் அடங்கும். இப்பொருட்கள் நகர்வு குறித்த செயற்பாடுகளில் அரசின் கவனம் திரும்பி இருந்தமையும் நாம்  அறிந்ததே.

மலையக இளைஞர்கள்

மலையக இளைஞர்களிடையே முன்னரைக் காட்டிலும் இப்போது ஒரு முன்னேற்றகரமான போக்கு காணப்படுகின்றது. ஒரு நாகரிகமான வாழ்க்கையை  வாழவேண்டும் என்கிற உந்துதல் இவர்களிடையே காணப்படுகின்றது. ஏனைய சமூகங்களுக்கு நிகராக இது மேலெழும்ப வேண்டும் என்கிற வலி அநேகமான மலையக இளைஞர்களிடம் காணப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. மலையக இளைஞர்கள் இன்று பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள். இந்தச் சவால்களை வெற்றிகொள்ள மலையக அரசியல்வாதிகள் எந்தளவுக்கு உந்து சக்தியாக இருக்கின்றார்கள் என்பது குறித்து சந்தேகங்கள்  வெளியிடப்பட்டு வருகின்றன. மலையக இளைஞர்களை தேர்தல் காலங்களில் சில அரசியல்வாதிகள் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தேர்தல் முடிந்ததும் இவர்களைத் தூக்கி எறிந்து விடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமலும் இல்லை. கொடிபிடித்தல், கோஷம் போடுதல், போஸ்டர்  ஒட்டுதல் என்றெல்லாம் தேர்தல் காலங்களில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இளைஞர்கள் வாக்குகளை வழங்கியும் ஏனைய பல உதவிகளைப் புரிந்தும் அரசியல்வாதிகளின் வெற்றிக்குத் தோள் கொடுக்கின்றனர்.

எனினும் அரசியல்வாதிகள் அற்பசொற்ப சலுகைகளை வழங்கி அவ்விளைஞர்களை திருப்திப்படுத்த முனைகின்றனரே தவிர உருப்படியான நடவடிக்கைகள் எதையும் முன்னெடுத்தார்களா என்பது சிந்திக்கத்தக்கதே.தனது தேர்தல் வெற் றிக்கு உழைத்த பல இளைஞர்களின் முகங்களை தேர்தலின் பின்னர் பல அரசியல்வாதிகள் மறந்து போகும் நிலைமையே அதிகமாக உள்ளது. இளைஞர் களுக்கு இது ஒரு பாதிப்பே. இளைஞர்களின் சக்தி அல்லது பலம் என்பது மேலானது என்று கண்டோம். ஆனால் இளைஞர் சக்தி அரசியல்வாதிகளினால் கொச்சைப்படுத்தப்படும் வரலாறுகளே மலையகத்தில் அதிகமாகக் காணப்படுகின் றது. இதனை இளைஞர்கள் தெளிவாக விளங்கிச் செயற்பட வேண்டும்.

பிழையான முன்னெடுப்புகள்

மலையக இளைஞர்கள் பொதுநோக்கு கொண்டவர்களாகவும் நேர்வழியில் செல் பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு நியாயமானதே. ஆனால் சில மலையக இளைஞர்களின் போக்குகள் கண்டிக்கத்தக்கதாக உள்ளன. சில மலையக இளைஞர்கள் சிங்கள மொழியில் பேசி சிங்கள மயமாகும் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தார். தமிழ் மொழியில், தனது தாய்மொழியில் அநேகமான சொற்கள் இருக்கும்போது சில இளைஞர்கள் சிங்கள மொழியை பல சந்தர்ப்பங்களில் கையாள்வது விரும்பத்தக்கதல்ல.மொழி என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது என்பார்கள். கருத்துப்பரிமாற்ற ஊடகம் என்ற ரீதியில் மொழிக்கு முக்கியமான ஓரிடம் இருந்து வருகின்றது. மொழி என்பது ஒவ்வொரு மனிதனதும் உரிமை. மொழிகளில் சிறந்ததாகத் தமிழ்மொழி காணப்படுகின்றது. தமிழனாக இருப்பதே ஒரு பெருமைதான் என்று தமிழர்கள் பலர் சொல்லக்கேட்டிருக்கின்றோம். அப்படி இருக்கும்போது தமிழை தாரைவார்த்துவிட்டு சிங்கள மொழியில் பேசி செயற்படுவது எவ்விதத்தில் நியாயம்? மொழியுரிமையை பேணுவதன் ஊடாக எமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முற்படுதல் வேண்டும்.

மலையக இளைஞர்கள் சிலர் போதைக்கு அடிமையாகி இருப்பதை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வயதுக்கு மீறிய செயற்பாடுகள் இவர்களிடம் காணப்படுகின்றன. புகைத்தல், மதுபானம் என்பன இளைஞர்களை ஆட்கொண்டிருக்கின்றன. இவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்துக்கும் செல வுக்கும் இடையில் அதிகமான விரிசல் நிலையொன்று காணப்படுகின்றது. இதில் இளைஞர்களின் மதுபான மற்றும் புகைத்தல் செலவுகள் விரும்பத்தக்கதாக இல்லை. குடிப்பழக்கம் சில இளைஞர்களின் குடும்பங்களிலும் முறுகல் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. கணவன் மனைவிக்கிடையே விரிசல்கள், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே விரிசல்கள், குடும்பத்துக்கும் அயலவர்களுக்குமிடையே விரிசல்கள் என்று பல மட்டங்களிலும் விரிசல்கள் ஏற்பட இளைஞர்களின் குடிப்பழக்கம் வலுசேர்த்திருக்கின்றது.

முன்னேறத்துடிக்கும் மலையகத்திற்கு இது ஒரு நல்ல சகுனமாகாது. குடியின் காரணமாக இடம்பெறும் குடும்ப வன்முறைகள் காரணமாக சில குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளமையும் இன்னும் சில உறுப்பினர்கள் நிரந்தர அங்கவீனர்களாகி உள்ளதையும் அறியக்கூடியதாக உள்ளது. எனவே குடிப்பழக்கம் என்ற போதைக்கு அடிமையான இளைஞர்கள் அதிலிருந்தும் மீண்டுவர வேண்டும்.

விரக்தி நிலை

மலையக இளைஞர்களின் விரக்தி நிலையை மேலோங்கச் செய்வதில் தொழிலின்மைக்கு முக்கிய இடமுள்ளது. மலையக இளைஞர்கள் தோட்டத் தொழிற் துறையை நாடிச்செல்லும் அளவிற்கு அத்தொழிற்துறை முன்னுதாரணமாக இல்லை. அடக்குமுறைகள், ஊதியப் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணிகள் இத்தொழிற்துறையில் இருந்தும் இளை ஞர்களை விலகிச்செல்ல வைத்துள்ளன. இளைஞர்களில் ஒரு தொகுதியினர் அரச தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில் ஏனையோர் தொழில் நிமித்தம் நகர்ப்புறங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கீழ்மட்ட தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். வேலைத்தளங்களில் இவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டி நேரிடுகின்றது. வர்த்தக நிலையங்களில் விற்பனையாளர்களாக அநேகமான இளைஞர்கள் தொழில்புரிந்து வருகின்றனர். தொழில்சட்ட மீறல்களுக்கு மத்தியில் இவர்களில் பலர் கடமையாற்றி வருகின்றனர். ஊதிய நிலைமைகளும் திருப்திகரமானதாக இல்லை.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரத்தில் சிறப்பான பெறுபேறு இல்லாதவர்கள் பலர் தொழில் இல்லாது விரக்தியுடன் காணப்படுகின்றனர். இந்த விரக்தி நிலையானது இவர்களை பிழையான வழிகளுக்கும் இட்டுச்செல்கின்றது. நெறி பிறழ்வுத் தன்மை, தற்கொலை, திருட்டு நடவடிக்கைகள் என்பவற்றில் ஈடுபட தொழிலற்ற விரக்தி நிலை பெரிதும் வழிவகுக்கின்றது. இத்தகையோரின் நலன்கருதி அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்று கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஷ் குறிப்பிடுகின்றார். பாடசாலையை விட்டு வெளியேறுபவர்களில் சுமார் 60 வீதமானோர் பெறுபேறுகளை உரியவாறு பூர்த்திசெய்யாத நிலையில் வெளியேறுகின்றனர். இவர்களில் சிலர் சாதாரண தொழிலாளர்களாக சந்தைக்குச் செல்கின்றனர். கீழ்மட்ட தொழில்களில் இவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் குறித்து அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமுள்ளது. தொழில்திறன் உள்ளவர்களாக இவர்களை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

பாடசாலை என்பது தொழிற்கல்வி நிலையமல்ல. கல்வி அங்கு போதிக்கப்படு கின்றது. எனவே இளைஞர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் நிலையில் அவர்களின் தொழில் ரீதியான திறன்களை வளர்க்க முனைதல் வேண்டும். சர்வதேச நாடுகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் உதவிகளை இதற்கென பெற்றுக்கொள்ள வேண்டும். வெறுமனே தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவது போதாது. தொழில்திறன் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறும் கலாநிதி சந்திரபோஷ், மலையக சமூகத்தை பற்றிய மதிப்பீட்டின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னரான மாற்றம், கல்வி அபிவிருத்தி, அரசாங்க தொழில் நிலை, சமூக அந்தஸ்து, தொழில் நிலை என்பவற்றை அறிந்து கொள்ள விஞ்ஞானபூர்வ மதிப்பீடு அவசியம் என்றும் தெரிவித்தார்.

வகிபாகம்

சமூக அபிவிருத்தி கருதி மலையக இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டியுள்ளது. சமூகத்தின் இருப்பினை உறுதி செய்தல், கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்து பின்வரும் சந்ததிகள் அறிந்து கொள்ள உதவுதல், சமூகப்பற்று, மொழிப்பற்று என்பன இவற்றுள் சில. மலையக தலைமைகள் சரியான வழியில் பயணிப்பதற்கு இளைஞர்களின் பக்கச்சார்பில்லாத நடுநிலையான அழுத்தம் அவசியமாக உள்ளது. பரிசீலனை செய்தல், பகுப்பாய்வு செய்தல், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றில் இளைஞர்களின் வகிபாகம் மிகவும் அவசியமானது. பங்கேற்பின் ஊடாக சமூக அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேண்டும். மலையகத்தைப் பொறுத்தவரை ஐக்கியமிக்க அமைப்புகள் முக்கியமானவை. இது குறித்து இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் தலைமைத்துவத்தை ஏற்கத் தயாராதல் வேண்டும். உலக நடப்புகளில் அதிகளவு ஈடுபாட்டுடனும், வாசிப்பு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலம், கணினி அறிவு என்பன இப்போது அவசியமாகியுள்ளன. இதற்கேற்ப இளைஞர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கல்விமைய சமூகமாக மலையக சமூகம் மாற்றம் பெறுவதற்கு தோள் கொடுக்கவேண்டும். 

இலங்கை அறிவுப் பொருளாதாரம் நோக்கிப் பயணிக்கின்றது. இதில் இளைஞர்களும் இணைந்து செயற்பட வேண்டும். இளைஞர் மத்தியில் கவனக் கலைப்புகள் அதிகமுள்ளன. இவற்றிலிருந்தும் மீண்டெழுந்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் பொருத்தமானவராகத் தம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சமூக விரோத சக்திகளுக்கு விலை போகாமல் தனித்துவத்துடன் நடந்து கொள்ளவேண்டிய பொறுப்பு மலையக இளைஞர்களுக்கு அதிகமாகவே உள்ளது. இப்பொறுப்பில் இருந்தும் அவர்கள் விலகிச்செல்ல முற் படலாகாது.

 துரைசாமி நடராஜா.