(நா.தனுஜா)

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகக் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதியின் செயலை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி குற்றவாளியாகக் கண்டது. அவருக்கு ஆறு வருடங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை  நீதிமன்றம் விதித்தது. எட்டு மாதங்களுக்கும் சற்று அதிகமான காலம் சிறையிலிருந்த அவரை கடந்த மாதம் பொதுமன்னிப்பளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்திருந்தார்.

அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிப்பதில் தனக்கிருக்கும் உரிமையை நீதித்துறையை மலினப்படுத்தி, அதன் சுதந்திரத்தை அருகச் செய்யக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிரு;ககும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்,அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு (போரையும், சமாதானத்தையும் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தை செயற்படுத்துவதைத் தவிர மற்றும்படி) ஜனாதிபதியின் நடவடிக்கைகள் கூடுதலான அளவிற்குப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தக்கூடியவையாக வந்திருக்கின்றன. 

அவரின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றின் ஊடாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறன்றமை குறிப்பிடத்தக்கது.