உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் நாட்டில் உரு­வா­கி­யுள்ள பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை பாகு­பா­டற்ற முறையில் முன்­னெ­டுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அந்தக் கட­மையை அரசு சரி­யான முறையில் கடைப்­பி­டிக்­கின்­றதா என்­பது சந்­தே­கத்­துக்குரி­ய­தா­கி­யுள்­ளது. 

இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக அவ­ச­ர­காலச் சட்டம், பயங்­க­ர­வாதத் தடைச்­ சட்டம் என்­பன வரை­ய­றை­யற்ற முறையில் பாய்­கின்­றன. ஆனால், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தைப் போன்று மத ரீதி­யாக, இன ரீதி­யாகக் குரோ­தத்­தையும் வன்­மு­றை­க­ளையும் தூண்­டு­கின்ற பிர­சா­ரங்­களை அரச தரப்­பி­னரும் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­களும் கண்டு கொள்­ளாத ஒரு போக்கே காணப்­ப­டு­கின்­றது. 

சர்­வ­தேச நாடுகள் இந்த பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராகப் போராடி வரு­கின்ற ஒரு சூழ­லில்தான் உள்­ளூரில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் மீது பற்­று­க்கொண்ட ஒரு­சில முஸ்­லிம்­க­ளினால் இந்தப் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் கொழும்பு, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு என பல இடங்­களில் அடுத்­த­டுத்து நடத்­தப்­பட்­டி­ருந்­தன. மத ரீதி­யான இந்த அடிப்­ப­டை­வாத தாக்­கு­தல்­களை  அனைத்­து­ல­கமும் கண்­டித்­தி­ருக்­கின்­றது.

புதி­தாக முளைத்­துள்ள இந்த சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தை வேர­றுப்­ப­தற்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் நாட­ளா­விய ரீதியில் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தப் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நூற்றுக் கணக்­கா­ன­வர்­களைப் படை­யி­னரும் பொலி­ஸாரும் கைது செய்­துள்­ளனர்.

இந்த பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் சமூகம் மிக­மோ­ச­மான நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றது. பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களைக் கைது செய்­வ­தற்­காக  விரிக்­கப்­பட்­டுள்ள வலையில் அப்­பா­வி­க­ளான முஸ்­லிம்­களும் சிக்கி பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

குற்­ற­வா­ளி­களும் சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்டு நீதியின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்­பதில் முஸ்லிம் சமூகம் அக்­க­றை­யா­கவும் பொறுப்­பா­கவும் செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனாலும், மத­வாத, இன­வாத அடிப்­ப­டையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் சம்­ப­வங்­களும் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருந்­தன.  

அவ­ச­ர­காலச் சட்­டமும், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டமும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற உச்ச நிலை­யி­லான தேசிய பாது­காப்பு நிலை­மை­களின் போதுதான் அடா­வ­டித்­த­ன­மாக புத்தளம் மற்றும் குருநா­கல் ஆகிய மாவட்­டங்­களின் உட்­பு­றப்­ப­கு­தி­களில் முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் என்­பன அடித்து நொறுக்கி தீயி­டப்­பட்­டன. முஸ்­லிம்­களின் உட­மை­களும் சூறை­யா­டப்­பட்­டன. இதன்­போது உயிர்ச் சேதங்­களும் ஏற்­பட்­டி­ருந்­தன.

வன்­மு­றை­களும் விஷம் கலந்த பிர­சா­ரமும்

ஆனால் பொலிஸ் விசா­ர­ணை­களும், நீதி­மன்ற விசா­ர­ணை­களும் நடை­பெ­று­வ­தாகக் கூறப்­பட்­டாலும், இந்தச் சம்­ப­வங்­களில் சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் எவரும் இன்னும் தண்­டிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளான இரண்டு ஆளுநர்­களும் மற்றும் அமைச்சர் ஒரு­வரும் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருந்­தார்கள் என்று அர­சியல் ரீதி­யாகக் குற்றம் சுமத்­தப்­பட்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாதப் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

இந்த இன­வாத பிர­சா­ரங்­க­ளுக்கு சிகரம் வைத்­தது போன்று அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்­க­ரா­கிய வரக்­கா­கொட சிறி ஞான­ரத்­தன தேரர் முஸ்­லிம்­க­ளு­டைய வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும், உணவு விடு­தி­க­ளுக்கும் சிங்­க­ள­வர்கள் செல்லக் கூடாது. அவற்றைப் புறக்­க­ணிக்க வேண்டும் என கூறி­யுள்ளார்.  

ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மயந்த திசா­நா­யக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்கர் ஞான­ரத்ன தேரர், முஸ்­லிம்கள் சிங்­கள மக்­க­ளுக்கு நஞ்­சூட்­டு­கின்­றார்கள். சிங்­கள மக்­களை அழிப்­ப­தற்­காக சதி செய்­கின்­றார்கள் என்று குற்றம் சுமத்­தி­யுள்ள அவர், சிங்­கள மக்கள் தங்­களைத் தாங்­களே பாது­காத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறி­வு­றுத்­தி­யுள்ளார். 

மாத்­த­ளையைச் சேர்ந்த மருத்­துவர் ஒருவர் நூற்­றுக்­க­ணக்­கான, ஆயி­ரக்­க­ணக்­கான சிங்­கள சிசுக்­களை அழித்­துள்ளார் என (இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கு இலக்­கா­கிய குரு­நா­கல் வைத்­தியர் டாக்டர் ஷாபியைக் குறிப்­பிடும் வகையில்) சுட்­டிக்­காட்­டிய ஞான­ரத்­ன தேரர், சில அம்­மா­மார்கள் இத்­த­கை­ய­வர்­களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் எனக் கூறி­யதைக் கேட்­ட­தாகக் குறிப்­பிட்டார். அவ்­வாறு செய்ய வேண்டும் என்று நான் கூற­மாட்டேன். ஆனால் அப்­ப­டித்தான் செய்ய வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். 

ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மயந்த திசா­நா­யக்க, முஸ்­லிம்­களை வெறுத்து ஒதுக்கக் கூடாது என்ற சாரப்­பட உரை­யாற்­றி­யதன் பின்னர் உரை­யாற்­றி­ய­போதே ஞான­ரத்­ன தேரர் இத்­த­கைய இன­வாத விஷத்தைக் கக்கும் வகையில் அந்த நிகழ்வில் உரை­யாற்­றி­யுள்ளார். 

விமலின் விஷமப் பிர­சாரம்

மறு­பு­றத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதப் பிர­சா­ரத்தின் மற்­று­மொரு நட­வ­டிக்­கை­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னு­டைய தாயாரின் சகோ­தரர் ஒரு­வரும் உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் நேர­டி­யாகச் சம்­பந்­தப்­பட்­டுள்ளார் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ளார். 

ஏற்­க­னவே பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை நடத்­திய இஸ்­லா­மிய அடிப்­ப­டை­ வாத அமைப்­புக்­க­ளு­டனும், அந்தப் பயங்­க­ர­வா­தி­க­ளு­டனும் ரிஷாத் பதி­யுதீன் தொடர்பு கொண்­டி­ருந்தார் என்ற அர­சியல் ரீதி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த விவ­காரம் விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்து, முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் தமது பத­வி­களைத் துறக்கும் அள­வுக்குத் தீவி­ர­ம­டைந்து அர­சி­யலில் ஒரு பிர­ள­யத்­தையே ஏற்­ப­டுத்தி இருந்­தன. 

இத்­த­கைய ஒரு பின்னணி­யில்தான் ரிஷாத் பதி­யு­தீனின் தாய்­வழி இரத்த உற­வினர் ஒருவர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் நேரடித் தொடர்பு கொண்­டி­ருந்தார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தி­ருந்தார். விமல் வீர­வன்ச தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் என்­பதும், மஹிந்த ராஜ­பக் ஷ அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதனை மறுத்­து­ரைத்த ரிஷாத் பதி­யுதீன், 'எனது தாயா­ருக்கு உற­வி­னரே இல்­லாத நிலையில் எனது தாயாரின் சகோ­தரர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தலில் தொடர்­பு­பட்­டி­ருந்தார் எனக் கூறு­வது ஏன்? நாட்டின் அமை­திக்குக் கேடு விளை­விக்கும் வகையில் விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் எதற்­காக இத்­த­கைய கருத்­துக்­களைத் தொடர்ச்­சி­யாகத் தெரி­விக்­கின்­றார்கள்?' என கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். 

பயங்­க­ர­வா­தத்­துடன் அல்­லது பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுடன் எவ­ரா­வது தொடர்பு கொண்­டி­ருந்தால், அதற்­கான சான்­று­க­ளுடன் அல்­லது சந்­தே­கத்­துக்­கு­ரிய விட­யங்­க­ளுடன் பாது­காப்புத் தரப்­பினர் மற்றும் பொலி­ஸாரின் கவ­னத்­துக்குக் கொண்டு வரு­வதே உண்­மையில் பொறுப்­புள்­ள­வர்­களின் செயற்­பா­டாக இருக்கும். 

அத்­த­கைய பொறுப்­பு­ணர்ச்சி இல்­லாத வகையில் அர­சியல் இலா­பத்­துக்­கா­கவும், அர­சியல் ரீதி­யாக பாதிப்­ப­டையச் செய்­வ­தற்­கா­கவும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பதும், பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­பதும் ஒரு பயங்­க­ர­வாத சூழலில் ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டாக மாட்­டாது. அது தேசிய பாது­காப்­புக்குக் குந்­தகம் விளை­விக்­கின்ற ஒரு செய­லா­கவே அமையும். 

இதுவும் பயங்­க­ர­வா­தம்­தானே......?

இஸ்லாம் மாத்­தி­ரமே ஒரே­யொரு மதம். இஸ்­லா­மி­யர்கள் தவிர வேறு எவரும் இருக்கக் கூடாது. அவர்கள் கொல்­லப்­பட வேண்டும் என்­பதே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் தத்­துவம். அந்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் ஐ.எஸ்.­ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் வழி­ந­டத்­த­லுடன் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. 

இந்த இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தமே சர்­வ­தேச பயங்­க­ர­வா­த­மாகப் பரி­ண­மித்­தி­ருக்­கின்­றது. ஐ.எஸ்.­ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் பின்னால் அணி­தி­ரண்­டி­ருப்­ப­வர்­களே சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்தப் பயங்­க­ர­வா­தத்தை வேர­றுப்­ப­தற்­கா­கவே தேசிய பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் நாட­ளா­விய ரீதியில் தேடுதல் நட­வ­டிக்­கை­களும், சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பயங்­க­ர­வா­தத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களும், சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­வர்­களும் இந்தப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள். 

இந்தச் சூழ்­நி­லையில் முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­களை அழித்­தொ­ழிப்­ப­தற்கு சதி செய்­கின்­றார்கள். எனவே, சிங்­க­ள­வர்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக சதி செய்­கின்ற முஸ்­லிம்­களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற விஷ­மத்­த­ன­மான கருத்து வெளிப்­பா­டும்­கூட, மத ரீதி­யான பயங்­க­ர­வாதம் அல்­லவா?

இஸ்லாம் மதம் மாத்­தி­ரமே இருக்க வேண்டும் என்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் என்றால், பௌத்த மதம் மாத்­தி­ரமே இருக்க வேண்டும். சிங்­கள பௌத்­தர்கள் மாத்­தி­ரமே இருக்க வேண்டும் என்ற ரீதியில் செய்­யப்­ப­டு­கின்ற பிர­சா­ரங்­களும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­தானே?

ஒரு பயங்­க­ர­வா­தத்தை வேர­றுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள சூழலில் இன்­னு­மொரு மத ரீதி­யான பயங்­க­ர­வாதக் கருத்­துக்­களைப் பரப்­பு­வதை எந்த வகை­யிலும் நியா­ய­மான நட­வ­டிக்­கை­யாகக் கொள்ள முடி­யாது. 

பெரும்­பான்மை பலத்தைக் கொண்­டுள்­ளார்கள் என்ற கார­ணத்துக்­காக இத்­த­கைய செயற்­பா­டு­களை நியா­ய­மான சிந்­தனை கொண்ட எவரும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்கள். 

இது ஒரு ஜன­நா­யக நாடு. பல்­லின மக்­களும், பல மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் பல்­லினத் தன்­மை­யுடன் இங்கு வாழ்­கின்­றனர். சிங்­க­ள­வர்கள் இந்த நாட்டின் பெரும்­பான்மை இன மக்­க­ளா­கவும், சிங்­கள பௌத்­தர்கள் பெரும்­பான்மை மதத்­த­வர்­க­ளா­கவும் திகழ்­கின்­றார்கள். இந்த பெரும்­பான்மைத் தன்­மைக்­கா­கவே சிங்­களம் அரச மொழி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பௌத்த மதத்­துக்கு அர­சி­ய­ல­மைப்பில் உயர்ந்த நிலையில் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

சிறு­பான்மை இன மக்­க­ளுக்கும், சிறு­பான்மை மதத்­த­வர்­க­ளுக்கும் அடிப்­படை உரி­மைகள் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இல்­லை­யென்று மறுப்­ப­தற்­கில்லை. ஆனால்,  பெரும்­பான்மை இனத்­த­வர்கள் என்­ப­தற்­காக சிங்­க­ள­வர்­க­ளுக்கும், சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கும் நாட்டு நடப்­புக்­க­ளிலும், செயற்­பா­டு­க­ளிலும் முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதன் மூலம் சிறு­பான்மை இன மக்­களும், சிறு­பான்மை மதத்­த­வர்­களும் அடக்­கப்­ப­டு­வ­தையும் ஒடுக்­கப்­ப­டு­வ­தையும் நியா­ய­மான செயற்­பா­டாகக் கொள்ள முடி­யாது.

சர்­வ­தேச உடன்­ப­டிக்கைச் சட்ட மீறல்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யி­டு­ப­வர்கள் நாட்டின் சிவில் மற்றும் அர­சியல் உரிமைச் சட்­டத்தை மீறி­ய­வர்­க­ளாகக் கரு­தப்­பட வேண்டும். சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையை ஏற்­றுள்ள இலங்கை அந்த உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வதற்­கான சட்டம் ஒன்­றையும் இயற்­றி­யுள்­ளது. இந்தச் சட்டம் அவ்­வப்­போது அரச தரப்­பி­னரின் அர­சியல் தேவைக்கு ஏற்ற வகையில் மாத்­திரம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

யாரேனும் (எந்த மொழி பேசு­ப­வ­ராக அல்­லது எந்த ஒரு மதத்தைப் பின்­பற்­று­ப­வ­ரா­கவும் இருக்­கலாம்) ஒருவர் ஒரு நப­ராக சட்­டத்தின் முன் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என சிவில் மற்றும் அர­சியல் உரிமைச் சட்டம் வலி­யு­றுத்­து­கின்­றது. அதே­வேளை, எந்­த­வொரு நபரும் யுத்­தத்தைத் தூண்­டவோ அல்­லது தேசத்­துக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வைத் தூண்­டவோ முடி­யாது. 

அத்­துடன் நாட்டில் இன ரீதி­யான வெறுப்­பு­ணர்­வையும், மத ரீதி­யான வெறுப்­பு­ணர்­வையும் எவரும் தூண்ட முடி­யாது. அத்­த­கைய வெறுப்­பு­ணர்வின் மூலம் பாகு­பாடு, குரோதம், வன்­முறை என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­து­ப­வர்கள் சிவில் மற்றும் அர­சியல் உரிமைச் சட்­டத்தின் கீழ் குற்­ற­வா­ளி­யாகக் கரு­தப்­ப­டுவார். 

இத்­த­கைய ஒரு நிலை­மையை உரு­வாக்க முயல்­ப­வர்கள், அவற்­றுக்கு உத­வு­ப­வர்கள், ஒத்­து­ழைப்­ப­வர்கள் அல்­லது அத்­த­கைய வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தப் போவ­தாக அச்­சு­றுத்­து­ப­வர்­களும் இந்தச் சட்­டத்தின் கீழ் குற்றம் புரிந்­த­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­வார்கள். இந்தக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு பத்து வரு­டங்­க­ளுக்குக் குறை­யாத கடுங்­காவல் சிறைத் தண்­டனை நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­படும் சிவில் மற்றும் அர­சியல் உரிமைச் சட்டம் கூறு­கின்­றது.

இந்தச் சட்டம் நடை­மு­றையில் உள்ள போதிலும், சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் கார­ண­மாக தேசிய பாது­காப்பு நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யுள்ள அவ­ச­ர­காலச் சட்டச் சூழலில் அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்­க­ரா­கிய வரக்­கா­கொட சிறி ஞான­ரத்ன தேரர் இன ரீதி­யா­னதும், மத ரீதி­யா­ன­து­மான வன்­மு­றை­களைத் தூண்­டத்­தக்க கருத்­துக்­களை துணிந்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார்;. 

அதே­போன்று பாராளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவும் இன­வாத மத­வாத கருத்­துக்­களை ஆதா­ர­மற்ற முறையில் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

அஸ்­கி­ரிய பீடத்தின் மகா­நா­யக்கர் சாதா­ரண மனி­த­ரல்ல. பௌத்த மத பீடங்­களில் ஒன்­றா­கிய கண்டி அஸ்­கி­ரிய பீடத்தின் உயர் தலை­வ­ராவார். அவர் கூறு­கின்ற கருத்­துக்­களை சிங்­கள பௌத்த மக்கள் வேத­வாக்­காகக் கருதிச் செயற்­ப­டு­வார்கள். அத்­த­கைய ஒரு பொறுப்­பான அந்­தஸ்தில் உள்ள ஒருவர் நாட்டின் முக்­கிய சட்­டத்தை மீறிச் செயற்­பட்­டி­ருப்­பதை சாதா­ரண விட­ய­மாகக் கொள்ள முடி­யாது.

நிதி­ய­மைச்­சரின் கண்­டனக் கருத்து மட்டும் போதாது

சிவில் மற்றும் அர­சியல் உரிமைச் சட்டம் என்­பது சர்­வ­தேச சிவில், அர­சியல் உரிமைப் பிர­க­ட­னத்தை ஏற்றுச் செயற்படுத்துவதாக இணங்கி சர்வதேசத்துக்கு ஒப்புதல் அளித்து அதனை ஒரு சட்டமாக நாட்டில் அரசாங்கம் அங்கீகரித்துப் பிரகடனம் செய்துள்ளது. 

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது நாட்டின் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்களினதும், தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களினதும் தலையாய கடமையாகும். இந்தக் கடமையில் இருந்து அவர்கள் தவறுவதென்பது பாரதூரமான ஒரு விடயமாகும். 

இருப்பினும் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துபவர்களும் சரி, அவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்களும் சரி, அஸ்கிரிய பீடாதிபதியின் கருத்து குறித்து இதுவரையில் எந்தவிதமான உணர்வுகளையும்  வெளிப்படுத்தவில்லை. 

அரச தரப்பில் நிதி அமைச்சராகிய மங்கள சமரவீர பௌத்த மதக் கொள்கைகளுக்கு விரோதமான முறையில் அஸ்கிரிய பீடாதிபதி கருத்து வெளியிட்டிருப்பதாகக் கண்டனத் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். உண்மையான பௌத்த மதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறிததும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். அதுவும்கூட காலம் தாழ்த்திய நிலையில், அஸ்கிரிய பீடாதிபதியின் கருத்து வெளியாகிய மூன்று தினங்களுக்குப் பின்னர் தனது டுவீட்டரில் கருத்து பதிவு செய்திருக்கின்றார். 

பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதென்பது பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களையும் அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களையும் தேடிக் கண்டுபிடித்து  சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் முடிவடைவதல்ல. 

இன ரீதியான, மதரீதியான அடக்குமுறை, பாகுபாடு, குரோதம், வன்முறை என்பவற்றைத் தூண்டுபவர்களையும் சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற போக்கில் எழுந்தமானமாகவும், பாகுபாடான முறையிலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது.   

பி.மாணிக்­க­வா­சகம்