(நா.தனுஜா)

ஜுலை மாத இறுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்ப்பதுடன், இவ்வருட இறுதியில் சுற்றுலாத்துறையை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்பமுடியும் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டிற்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் மூன்றாவது துறையாக சுற்றுலாத்துறை இருந்து வந்திருக்கிறது. எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களின் பின்னர் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் அதனை மீண்டும் சீர்செய்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 

இலங்கையின் ஒரேயொரு சுற்றுலா மற்றும் பிரயாண கண்காட்சியான 'சஞ்சாரக உதாவ' 9ஆ வது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நாட்டின் சுற்றுலா மற்றும் பிரயாணத்துறை எதிர்நோக்கியுள்ள மாபெரும் சவால்கள் குறித்து ஆராயும் வகையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் பிரதான அனுசரணையில் இலங்கையின் உள்ளக பிரயாண ஏற்பாட்டாளர்கள் சம்மேளனத்தினால் 21, 22 ஆகிய இரு தினங்களுக்கு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சஞ்சாரக உதாவ கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.