அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய விடயம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒரு மத ரீதியான வேறுபாடுகள் எந்நச் சந்தர்ப்பத்திலும் நுழைந்து இதைக் குழப்புவதற்கு இடம்கொடுக்கக்கூடாது கிழக்காக இருந்தாலும் சரி, வடக்காக இருந்தாலும் சரி முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் இணைந்து தான் எந்தவித அரசியல் ரீதியான விடயங்களையும் அணுக வேண்டிய காலகட்டத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்  என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.. 

பெரும்பான்மை பௌத்த தேரர்களுக்காகவோ அல்லது பெருபான்மை பௌத்த தேசியவாதத்திற் காகவோ நாங்கள் எங்களுடைய ஒற்றுமை விடயங்களில் நாங்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டிய ஒரு கடமைப்பாடு இருக்கின்றதாக இன்று காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற கிழக்குப் போராட்டத்திற்கு ஆதரவாக தேங்காய் உடைத்து வழிபாடுகள் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை பிரதேச மக்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற போராட்டத்தினுடைய ஒரு அங்கமாக சாகும் வரையான ஒரு உணவு தவிர்ப்புப் போராட்டம் அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மக்கள் சார்பாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று இப்போராட்டத்தினை  நடத்தி இருக்கின்றோம்.

35வருடங்களுக்கு மேலாக கல்முனை உப பிரதேச செயலகமாக இருக்கின்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை நிரந்தரமாக ஒரு பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோருகின்ற நியாயமான அந்த மக்களுடைய போராட்டத்தை நாங்கள் உண்மையிலே ஆதரிக்கின்றோம். நிச்சயமாக ஆதரிக்கவேண்டிய விடயம் அதைவிட இது ஒரு அரசியல் சார்ந்த விடயமாக இருக்கிறபடியால் நாங்கள் அரசியல் ரீதியாகவும் இதை அணுகவேண்டும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப் பினர் நேற்றைய தினம் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பாக விரிவான பேச்சுவார்ததை நடத்தப்பட்டது. 

ஆனால்,  அங்கே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதற்கு இணங்கியிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலோ தலைவரோ அல்லது பிரதிநிதிகளோ நேரடியாக இது சம்பந்தமாக எவ்விதமான கருத்தையும் கூறவில்லை ஒரு மூடிய அறைக்குள்ளே தான் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.

ஆனால் பகிரங்கமாக முஸ்லிம் தரப்பினர் இதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இந்தப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்துக்கின்ற விடயத்தில் முஸ்லிம் காட்சிகள் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகள் நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். நிபந்தனையில் அடிப்படையிலாவது ஏற்றுக்கொண்டிருகின்றோம் என்ற ஒரு கருத்தை இதுவரையில் தெரிவிக்கவில்லை.

ஆனால்,  ஊடகங்களில் தான் இக்கருத்தினை அவர்கள் இணங்கியிருப்பதாக ஒரு கருத்தினைத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்புபட்ட அமைச்சர் கூட அது சில நிபந்தனைகளோடு அந்த எல்லை நிர்ணயம் மற்றும் ஏனைய விடயங்கள் சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும். ஆராயப்படவேண்டும் என்ற ஒரு கருத்தைக்கூயிருக்கின்றாரே தவிர இதற்கு நிரந்தரமான ஒரு முடிவாக ஒரு இணக்கம் தெரிவித்தாக எச் செய்திகளும் இல்லை.

இக்கோரிக்கைக்கு அந்த மக்களும் சரி நாங்கள் சரி தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது. நிரந்தரமாக பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும் வரைக்கும் நாங்கள் போராடவேண்டிய கடமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். என்று மேலும் தெரிவித்துள்ளார்.