வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு  நாகர்கோவில் மீள் குடியேற்ற கிராம மக்கள் தமது கிராமத்தில் மணல் அகழ்வு முயற்சிக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அரச வீட்டுத் திட்டம் ஒன்றினூடாக குறித்த குடத்தனை வடக்கிலுள்ள நாகர்கோவில் மீள் குடியேற்றத்திற்கு அருகில் வீட்டுத் திட்டம் ஒன்று அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் மேற் கொண்டு வருகின்ற நிலையில் அங்குள்ள மணல் மேட்டை மட்டப் படுத்தி அதில் வீட்டுத் திட்டம் அமைக்க வேண்டிய நிலையில் அம் மணல் மேட்டு மணலை  ஏற்றி விற்பனை செய்யும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ள முயன்ற வேளை நாகர்கோவில் மீள் குடியேற்ற கிராம மக்கள் தடுத்துள்ளனர்.

தமது குடியிருப்புக்கு சுமார் 100 மீற்றருக்கு அப்பால்  பல ஆண்டுகளாக மணல் அகழ்வு மேற் கொள்ளப்பட்டதாகவும், அவை இப்போது பாரிய குழிகளாக காணப்படுவதாகவும் அவை எந்தவிதத்திலும் மட்டப் படுத்தாமல் தற்போது தமது குடியிருப்பில் மணல் அகழ்வு மேற்கொள்ள இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தாம் 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு பாரிய கடல் நீர் தமது கிராமத்திற்குள் புகுந்த வேளை தாம் குறித்த மணல் மேட்டில் அமர்ந்தே தமது உயிர்களை காப்பாற்றியதாகவும் மாரி காலங்களில் ஏற்கனவே தமது கிராமத்தை சூழ மணல் அகழ்ந்த இடங்களில் ஆறடிக்கு அதிகாமான தண்ணீர் தேக்கம் ஏற்படுவதாகவும் அதேவேளை கடலிலிருந்து தமது வீடுகளுக்கு ஒவ்வொரு மாரி காலத்திலும் கடல் நீர் உட் புகுவதாகவும் தெரிவித்த குடத்தனை வடக்கு நாகர்கோவில் மீள் குடியேற்ற கிராம மக்கள் இந்நிலையில் தமக்கு பாதுகாப்பாக இருக்கின்ற குறித்த, மணல் மேட்டில் மணல் அகழ்வதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர்.