கொழும்பின் சில பகுதிகளில் நாளை  சனிக்கிழமை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி நீர் விநியோகத்தடையானது, சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (23) நள்ளிரவு 12.00 மணி வரை 15 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் என்று, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அம்பத்தல நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல ஆகிய மாநகர சபை பிரிவுகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபை பிரிவுகளிலும், கொட்டிகாவத்தை, முல்லேரியா ஆகிய பிரதேச சபை பிரிவுகளிலும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத் திட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.