(எம்.எப்.எம்.பஸீர்)

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  ஜனாதிபதியின் முன்னாள் அலுவலக பிரதானி  கலாநிதி குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னவின் கையெழுத்துடன் கூடிய குற்றப் பத்திரிகையே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது.

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கான கட்டடம், அங்கிருந்த இரும்புப் பொருட்கள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்த இந்தியப் பிரஜைக்கு, நிறுவனத்தை கையளிப்பதற்காக இலங்கை சீனி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியிடம் 20 மில்லியம் ரூபா இலஞ்சம் பெற்ற 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுககொண்டபோது பிரதிவாதிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.