(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் சம்பவங்களை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 3 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (டி.ஐ.ஜி.) மற்றும் 6 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொருத்தமான குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க,  மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், விஷேட பாதுகாப்பு பிரிவுன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தஸநாயக்க ஆகிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராகவே இந் நடவடிக்கைகளை எடுக்க சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், முன்னாள் அமைச்சு செயலர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு 21/4 தொடர் தககுதல்கள் குறித்து விசாரித்தது. அதன் விசாரணைகளின் இறுதி அறிக்கையை அண்மையில் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவ்வறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையை ஆராய்ந்தே சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.