(செ.தேன்மொழி)

செவனகல மற்றும் பெலவத்த தொழிற்சாலைகளை அரசிடமிருந்து நீக்கி தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கான சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவனகல ஊழியர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் பாராளுமன்ற நுழைவாயிலின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குறித்த சட்ட மூலம் தொடர்பான விவாதத்தினை எதிர்த்தே இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பத்தரமுல்ல - பாராளுமன்ற சுற்று வட்டத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், அப் பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஆர்பாட்டகாரர்களை மறித்து பொலிஸார் தடுப்பு வேலி போட்டிருந்ததுடன். இதன்போது அவர்கள் பாதையில் அமர்ந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பாராளுமன்ற நுழைவாயில் வழியாக பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான , சுதந்திரகட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர, எஸ்.எம். சந்ரசேன, இரஞ்சித் சொய்ஷா, விஜித பேருகொட மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்னெத்தி ஆகியோர் ஆர்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் விடுதலைமுன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்னெத்தி இன்று விவாதத்திற்கு கொண்டவரப்படவிருக்கும் இந்த சட்டமூலமானது ஐ.தே.கட்சியின் சூழ்ச்சி என குறிப்பிட்டதுடன் இதற்கு எந்த அரசியல் வாதியும் ஒத்துழைப்பு வழங்க கூடாது எனவும் கூறினார்.

ஆர்பாட்டகாரர்களில் ஐவர் அடங்கிய குழுவுக்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை சந்தித்து பேசுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் அமைச்சரிடம் பெலவத்த மற்றும் செவனகல தொழிற்சாலைகளை தனியார் துறைக்கு வழங்க வேண்டாம் என வலியுறுத்துவதுடன், அவ்வாறு வழங்கினால் நாடளாவிய ரீதியில் ஆர்பாட்டங்களை மேற்கொள்வதாகவும் எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டு சென்றனர். பின் ஆர்பாட்டகாரர்கள் களைந்து சென்றனர்.