(எம்.எப்.எம்.பஸீர்) 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் சந்தேக நபரான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

சட்ட மா அதிபர், கொழும்பு பிரதான  நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில்  நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தனது மகளின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஜெப்ரி ஜோசப் அலோசியஸுக்கு கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.  

அவர் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ள காலப்பகுதியில், குறித்த சந்தேகநபர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளதாக இன்று மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம தெரிவித்தார். 

இதன் காரணமாக வழக்கின் 10 ஆவது சந்தேகநபர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்குவதனூடாக அவர் நீதிமன்றத்தை புறக்கணிக்கக்கூடும் சிரேஷ்ட அரச சட்டவாதி  லக்மினி கிரிஹாகம மன்றில் சுட்டிக்காட்டினார். 

இதனையடுத்தே அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயண அனுமதி இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.