(எம்.மனோசித்ரா)

தேசிய கல்வி கொள்கையொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சர்கள் பலரும் முயற்சித்த போதும் முடியாமல் போனது. இந்நிலையில் எதிர்கால மனித வளத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாகும்  வகையில் உயர்ந்த தரத்தை கொண்ட புதிய தேசிய கல்வி சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவம் வழங்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் புதிதாக தயாரிக்கப்பட்ட தேசிய கல்வி சட்ட வரைபு இன்று இறுதி கலந்தாய்வுக்காக வெளியீடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பிரித்தானிய ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரைக்கும் அமுலில் உள்ள 1939/31 இலக்க கல்வி சட்டமூலத்திற்கு பதிலாக புதிய கல்வி கொள்கையை தயாரிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சர்கள் பலரும் அவதானம் செலுத்தியிருந்தனர்.

கல்வி துறையின் பல ஆண்டுகாலமாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கு உரிய தீர்வினை முன்வைக்கும் வகையில் கல்வி துறையின் தரத்திற்காக புதிய தேசிய கல்வி சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும்

ஆட்சி மாறினாலும் அமைச்சர்கள் மாறினாலும் கொள்கை ரீதியாக மாற்றமடையாத கல்வி கொள்கையொன்றை இதன் ஊடாக நாட்டுக்கு வழங்க முடியும். புதிய தேசிய கல்வி கொள்கை ஒன்றை தயாரித்தமையின் ஊடாக கல்வி துறையில் ஆர்வம் கொண்டோரின் நீண்ட கால எதிர்பார்ப்பினை மலரச் செய்துள்ளது என்றார்.