(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும்  தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாதகமான நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 

அத்தோடு அனைத்து தரப்பினர்களுக்குமிடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைப்புடன் இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 

உரிய காலத்திற்கு அதிகாரிகளை அச்சேவைக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக அச்சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்கப்பெறாமல் போவதுடன், அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாதகமான நிலைமையை ஏற்படுத்தும். 

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் திறமைவாய்ந்த இராணுவம் என்ற வகையில் எமது முப்படையினருக்கு ஐ.நா அமைதிகாக்கும் பணியில் அதிக கேள்வி உள்ள அதேவேளை, வெவ்வேறு நாடுகளில் இலங்கையின் முப்படையினருக்கு பயிற்சி சந்தர்ப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

அச் சந்தர்ப்பத்தை உரிய முறையில் அந்த உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான முறைமைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.