(நா.தனுஜா)

உள்ளக, வெளியக அழுத்தங்களின் மத்தியிலும் தமது கடமைகளை நேர்மையான முறையில் செய்வதுடன், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் அரச அலுவலர்களை கௌரவிக்கும் வகையில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் கடந்த வருடம் நடத்தப்பட்ட 'இன்டர்கிரிட்டி ஐடெல் 2018' என்ற விருது வழங்கல் நிகழ்வு, இம்முறை 'இன்டர்கிரிட்டி ஐகொன்' என்ற பெயரில் நடைபெறவுள்ளது.

சர்வதேச ரீதியில் இயங்கும் 'எகவுன்டிபிலிட்டி லப்' என்ற நிறுவனத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த விருது வழங்கல் நிகழ்வின் ஊடாக நேர்மையாகச் செயற்படும் அரச ஊழியர்களை ஊக்குவிப்பதாக அமைவதுடன், அவர்களுக்குப் பெருமையீட்டிக் கொடுப்பதாகவும் அமைகின்றது.

இந்த விருதைப் பெறுவதற்குத் தகுதியுடையவர் என்று கருதும் நபர்களை பொதுமக்கள் பரிந்துரை செய்ய முடியும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்டு, அவர்களில் ஐந்து பேர் தெரிவு செய்யப்படுவார்கள். அந்த ஐவர் தொடர்பிலும் இரண்டு வாரகால குறுஞ்செய்தி வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் அதிக வாக்குகளைப் பெறுபவர் இன்டகிரிட்டி ஐகொன் விருதைப் பெற்றுக்கொள்வார்.

அந்தவகையில் இவ்வாண்டுக்கான இன்டகிரிட்டி ஐகொன் விருது வழங்கலுக்கான முன்மொழிவுகளை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு கோரியுள்ளது. நேர்மையான விதத்தில் செயற்பட்டு, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய அரச அலுவலர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம். அதற்கான முன்மொழிவுப் www.intergrityicon.lk  என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அல்லது 0711295295 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.