கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெறும் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தருமுயர்த்தக்கோரி நடைபெறும் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழு ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் க.நல்லதம்பி அறிவித்துள்ளார்.

சங்கம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலம் காலமாக ஜனநாயக வளிமுறைகளை மீறி நடைபெறும் செயற்பாடுகளில் இந்த கல்முனை வடக்கு செயலகத்தை தரமுயர்த்தாமல் விட்டமையும் ஒன்று. இது வேண்டுமென்றே செய்யப்பட்டவொன்று என்பதனை பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. இதற்காக ஜனநாயக ரீதியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வலுவிழந்தவையாக்கப்பட்டன. இந்நிலையில் இனமத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து தற்போது நடாத்தப்படும் இப்போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தனது முழு ஆதாவை வழங்கி நிற்கின்றது.

ஜனநாயக வழிமுறைகளில் எண்பது ஆண்டுகள் நம்பிக்கை கொண்டுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கல்முனை வடக்கு செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏன் ஆதரவு வழங்குகின்றது எனில், இங்குள்ள பாடசாலைகளும், அங்கு கடமையாற்றுகின்ற தமிழ் பேசும் அதிபர், ஆசிரியர்களும், அங்குவாழும் மக்களும் பல துயரங்களை அனுபவித்து வருவதனை நாம் பலகாலமாக அவதானித்து வருகின்றோம். இவை அடக்குமுறைகளால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட காரியங்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

கல்முனை வடக்கு செயலகத்தை தரமுயர்த்துவதென்பது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது, என்பதற்கு அப்பால் பணிகள் இலகுவாக்கப்பட்டு, எவரும் மனவேதனைப்படாமல் வாழ்வதற்கான வழிமுறைகளை உருவாக்கும் என்றே கருதுகின்றோம்.

ஆகையால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.