மலேசியவுக்கு சொந்தமான எம்.எச் -17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நான்கு பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் எம்.எச் - 17 விமானத்தை சுட்டி வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை கொலை செய்ததாகவும் நெதர்லாந்தைச் சேர்ந்த விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந் நிலையில் இது தொடர்பான வழக்கு அடுத்தவருடம் நெதர்லாந்தில் ஆரம்பமாகவுள்ளது. 

ஜூலை 17 ஆண்டு ஆம்ஸ்டார்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்திலிருந்து மலேசியாவை நோக்கி புறப்பட்ட எம்.எச் - 17 விமானம், புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரஷ்ய – உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது.

அது உக்ரைன் அரசு மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் பிரிவினைவாத குழுக்கள் ஆகியோர் இடையே மோதல் நிலவி வந்த நேரம். அப்போது உக்ரைன் இராணுவ விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இதன்போதே குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என நெதர்லாந்தின் விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதனாலேயே சந்தேக நபர்கள் நால்வருக்கும் எதிராக சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த கூட்டு விசாரணை குழு முதலில் ஒரு பெரிய பட்டியல் இருப்பதாகவும் ஆதாரம் கிடைத்தால் வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தது.

இகோர் கிர்கின் என்பவர் ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் கேர்னல் ஆவார். அவருக்கு கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

ரஷ்ய கூட்டமைப்பின் உயரிய இராணுவ அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின். ஆயுதக் குழுக்கள் விமானத்தை சுட்டு வீழ்த்த வில்லை என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும் என தாம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

செர்கே டுபின்ஸ்கி என்பவர் ரஷ்யாவின் இராணுவ உளவு அமைப்பில் கிர்கினுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டவர்.

ஓலெக் புல்டோவ் என்பவர் ஸ்பிட்ஸ்னாஸ் ஜி.ஆர்.யு இராணுவத்தில் வீரராக இருந்தார். டோனெஸ்க் உளவு துறையின் துணை தலைவராக இருந்தார்.

உக்ரனை சேர்ந்த லியோனிட் கார்செங்கோ எந்த ராணுவ பின்புலனும் இல்லாதவர். ஆனால் கிழக்கு உக்ரைனின் ஒரு பிரிவினைவாத ஆயுதக் குழுவின் பிரிவு ஒன்றை வழிநடத்தியவர் என விசாரணை அதிகாரி கூறியுள்ளனர்.