இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் ஓடிய ரசிகர் ஒருவர் நிலத்தில் விழுந்து கையை முறித்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து உலக கிண்ணப்போட்டிகளின் பாதுகாப்பு குறித்து ஏற்பாட்டாளர்கள் தீவிர மறு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகளிற்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின்னர் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடியுள்ளார்.

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றவேளை அவர் நிலத்தில் விழுந்துள்ளார் இதன் காரணமாக அவரது கை உடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போட்டியில் இவ்வாறான மற்றொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி பெயில்ஸ்களை அகற்றியுள்ளார். அவரை பிடிப்பதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அவர் மைதானத்தின் மற்ற பக்கத்தை நோக்கி ஓடி தப்பியுள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என  இரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட இரசிகரை மைதானத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டி நடைபெறும்போது ஆடுகளத்தை நோக்கி ஓடுவது பிரிட்டனின் குற்றச்செயல் என்பது குறிப்பிடத்தக்கது.