மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் மகிழ்திருமேனி தெரிவாகியிருக்கிறார்.

முன்தினம் பார்த்தேனே, தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கி, சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் மகிழ் திருமேனி. இவர் திரைப்பட விழாக்களில் பங்குபற்றும் போது இலக்கியத் தமிழில் பேசி, வந்திருக்கும் ரசிகர்களையும், திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர்.

இவர் முதன் முதலாக அறிமுக இயக்குனர் வெங்கடேச கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் பேசுகையில்,“ அண்மையில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் கதாபாத்திரத்தின் பின்னணி குரலால் கவர்ந்து இழுக்கப்பட்டேன். பிறகு அந்தக் குரல் யாருடையது என்று விசாரிக்கும் பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி அவர்களின் குரல் என்றவுடன், அவரது வில்லத்தனம் கலந்த குரலுக்காகவே முதலில் தேர்வு செய்தேன். பிறகு அவரை நேரில் பார்த்ததும் அவரது கண்களும் எம்மை ஈர்த்தன. இதனால் அவரை வில்லனாக நடிக்க தீர்மானித்து, அவரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கினேன்.” என்றார்.