கந்தகெட்டிய - லொக்கல் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட மாணவியின் சடலம் குறித்த விசாரணையின் போது குறித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த லக்சிகா மதுவன்தி என்ற 18 வயது மாணவியே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவியின் சடலம் லொக்கல்ஓயா ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் இது தற்கொலையாக இருக்க முடியாது. கொலை செய்யப்பட்டே ஆற்றில் போடப்பட்டிருக்கலாமென்று ஆரம்பத்தில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

மீட்கப்பட்ட குறித்த மாணவியின் சடலம் நீதவான் நீதிபதியின் உத்தரவிற்கிணங்க பதுளை அரச வைத்தியசாலை பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு சட்ட வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

பதுளை சட்ட வைத்திய அதிகாரி சடலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நீரில் மூழ்கியே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அவரது அறிக்கையை அவர் பதுளை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை பதுளைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த மாணவியின் சடலம் லொக்கல் ஓயா ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது. 

அத்துடன் மாணவியின் பாதணிகள், புத்தகப்பை ஆகியவற்றையும் பொலிசார் ஆற்றங்கரையிலிருந்து மீட்டுள்ளனர். 

இதையடுத்து பதுளைப் பொலிசார் தொடர்ந்தும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.