தென்னாபிரிக்காவுடனான போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நேற்று பர்மிங்காமில் இடம்பெற்றது.

இப் போட்டியானது மழை காரணமாக நேரம் தாழ்த்தி ஆரம்பமானதால் ஓவர்களின் எண்ணிக்கை 49 ஆக மட்டுப்படுத்தப்பட்டது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

242 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டில் 35 ஓட்டத்தையும், முன்ரோ 9 ஓட்டத்தையும், ரோஸ் டெய்லர் மற்றும் டொம் லெதம் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்துடனும், ஜேம்ஸ் நீஷம் 23 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 60 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 138 பந்துகளில் 9 நான்கு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 106 ஓட்டத்துடனும், மிட்செல் சண்டனர் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபரிக்க அணி சார்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுக்களையும், ரபடா, லுங்கி நிகிடி மற்றும் பெஹ்லுக்வேயோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறாது, தொடரிலிருந்து வெளியேறும் வாய்ப்பு அநேகமாக உறுதியாகிவிட்டது. 

3 புள்ளியுடன் உள்ள தென்னாபிரிக்க அணி ஏனைய 3 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் பலன் இல்லை. ஒரு வேளை ரன்ரேட்டில் நல்ல நிலையை அடைந்தால் வாய்ப்பு கிட்டலாம். 

photo credit : ‍icc