(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

தமிழ் மக்களின்  உரிமை சார்ந்த மற்றும் நலன்களை பெற்றுக்கொள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்களும் வரலாறும் அவர்களை மன்னிக்காது என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

தமிழினப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணை நடத்துவது இறைமையைப் பாதிக்கும் எனக் கூறும் அரசாங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு மாத்திரம் எவ்வாறு சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியது என்றும் அவர் சபையில்  கேள்வியெழுப்பினார். 

வடக்கிலும், கிழக்கிலும் அரசாங்க படைகளாலும், பல்வேறு அரச நிறுவனங்களாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்கே அகிம்சைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு இதற்கான போராட்டங்கள் முடிவடைந்தபோதும் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.  தொல்பொருள் திணைக்களம் எனப் பல நிறுவனங்கள் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்காக செயற்படுகின்றன. வடக்கில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் மற்றும் ஆலயங்களுக்கான காணிகளை சுவீகரித்து வருகிறது. இதன் நிர்வாகக் குழுவில் 32 சிங்களவர்களே இருக்கின்றனர். வடக்கில் 837 இடங்கள் இத்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்க படைகளிலிருந்து மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.

குறிப்பாக அரசாங்கத்தை பாதுகாத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்கள், நிலங்களை மீட்பதுபோன்ற உரிமைசார்ந்த விடயங்களுக்காக அரசாங்கத்துடன் பேரம்பேசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துக்காக தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த, தமிழர்களின் வாக்குகளில் தெரிவான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவிடயத்தில் பேரம்பேசவில்லையாயின் வரலாறும், தமிழ் மக்களும் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.