(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேனின் சாரதியை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில், வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மரதன்கடவல, திருக்கொண்டியாமடு - செவனபிட்டிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இரு சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 12 பேர் படு காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேனொன்று, பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியில் அதே திசையில் பயணித்து கொண்டிருந்த உழவு இயந்திரத்தை அபாயகரமான முறையில் முந்திச் செல்ல முற்பட்டபோதே விபத்துக்குள்ளானது. 

விபத்து இடம்பெறும்போது குறித்த உழவு இயந்திரத்தில் 20 பேர் பயணித்துள்ளதாக கூறும் பொலிஸார்,  முன்னால் மறு திசையில் வாகனமொன்று வரும் நிலையில் வேன் சாரதி உழவு இயந்திரத்தை அபாயகரமாக முந்திச் செல்ல முற்பட்டுள்ளதாகவும், அதனால் உழவு இயந்திரத்தில் வேன் மோதுண்டதால் அந்த உழவு இயந்திரம் சுமார் 100 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த கடை ஒன்றினையும் மோதியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந் நிலையில் விபத்தையடுத்து வேனின் சாரதி  வெலிகந்த பொலிஸாரால் கைதுசெய்யயப்பட்டு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பாட்டார்.

இதன்போது நீதிவான் அவரை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.