(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால் கொழும்பில் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில் சுரங்க பாதைகள் அமைத்து மழை நீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

 ஆனால் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட உமாஓயா வேலைத்திட்டத்தால் அந்த பிரதேச மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூல மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நகர அபிவிருத்திட்ட அதிகாரசபை கோத்தபாய ராஜபக்ஷ்வின் கீழே இருந்தது. குறித்த அதிகாரசபை தூரநோக்கு இல்லாமலும் வேலைத்திட்டத்தில் எந்த விஞ்ஞான முறைமையும் இல்லாமல் கொழும்பில் குவியும் குப்பைகளை அகற்ற மேற்காகொண்ட நடவடிக்கையையால் ஏற்பட்ட பாதிப்புக்களை நாங்கள் கண்டோம். 

ஆனால் இன்று பாரிய நகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு முறையான வேலைத்திட்டத்தில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை விஞ்ஞான முறைமையிலான வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. 

கடந்த காலங்களில் கொழும்பு நகரம் சிறிய மழைக்கும் நீரில் மூழ்கும் நிலையே இருந்து வந்தது. ஆனால் இன்று மழைநீர் கடலுக்கு வழிந்தாதோட முறையான வேலைத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

குறிப்பாக சுரங்கப்பாதைகள் அமைத்து மழைநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.