(செ.தேன்மொழி)

இலங்கையில் வருடத்திற்கு வாகன விபத்துகளினூடாக ஒரு இலட்சத்து 15 பேர் உயிரிழக்கின்றனர்.

ஒழுங்கான போக்குவரத்து விதி இல்லாதனாலேயே அதிகளவான உயிரிழப்பு ஏற்படுகின்றது. எந்தவித இடையூறு வந்தாலும் போக்குவரத்து ஒழுக்க விதிகளை பேணுவதற்கான உரிய செயற்பாடுகளை தனது பதவிகாலத்திற்குள் மேற்கொள்வதாக சிவில் விமான சேவை மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரனத்துங்க தெரிவித்தார்.

கொழும்பு மரதானையிலுள்ள சிவில் விமான சேவை மற்றும் போக்குவரத்து அமைச்சில் நேற்று புதன்கிழமை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் கலந்துக் கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பட்டார். 

இந்த நிகழ்விலே சிவில் விமான சேவை மற்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க , அமைச்சரவையின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

போக்குவரத்து ஒழுக்க விதிகளை ஏற்படுத்துவதற்கு எதிராக எவ்விதமான தடைகள் மற்றும் சவால்கள் ஏற்பட்டாலும் இந்த ஒழுக்க விதிகளை பேணுவதற்கான உரிய நடவடிக்கைகளை செயற்படுத்த தாம் ஒருபோதும் பின்வரமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், 

வாகன விபத்துகளில் உலகளாவிய ரீதியில் 1.5 மில்லியன் பேர் உயிரிழப்பதுடன், 30 - 40 மில்லியனுக்கு இடைப்பட்டவர்கள் காயமடைகின்றனர். வாகன விபத்துகளில் உயிரிழக்கும் 90 வீதமானோர்  சாதாரண மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாட்டவர்களே . 

அதேவேளை 5- 29 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவு உயிரிழக்கின்றனர். இதில் 73 வீதமானோர் ஆண்களே, இந்த விபத்தின் ஊடாக நாட்டின் சிறந்த மனிதவளமே இல்லாமல் போகின்றது. இதனாலேயே வாகன விபத்து பெரும் அழிவாக அமைகின்றது. 

உலக சுகாதார சங்கத்தின் அறிவித்தலின் படி லிபியாவிலே வாகன விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன். அதாவது 35.9 இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை சென் மெரினோ இராச்சியத்திலே வாகன விபத்துகள் குறைவு என்பதுடன் இதனால் எந்தவித மரணமும் ஏற்பட வில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையிலே வாகன விபத்தினூடாக 14.9 இலட்சம் பேர் இறப்பதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் சென் மரினோ இராச்சியத்தைப் போல் வாகன விபத்துக்கள் அற்ற நாடாக வேண்டும் என்றால் 79 நாடுகளை கடந்து முன்னோக்கி செல்ல வேண்டும். அது சாதாரணமான விடயமல்ல. இருந்தபோதும் இந்த சவாலை நாம் நாட்டுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

அதற்காக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையை எதிர்வரும் காலங்களில் ஆணைக்குழுவாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்த ஆணைக்குழுவை செயற்பட செய்வதின் மூலம் போக்குவரத்து ஒழுக்க விதி தொடர்பான நடவடிக்கைகளை  துரிதமாக மேற்கொள்ள முடியும் என நினைக்கின்றேன் என தெரிவித்தார்.