பினாக் ரஞ்சன் சக்கரவர்த்தி

ஐக்கிய இராச்சியம் இந்துசமுத்திரத்தில் ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான அதன் ' காலனித்துவ நிருவாகத்தை மொரீசியஸ் நாட்டுக்கு அனுகூலமான முறையில் 6 மாதகாலத்திற்குள்  வாபஸ் பெறவேண்டும் ' என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் ( 193 உறுப்புநாடுகளில் 116 நாடுகள் ஆதரவாக ) கடந்த மாதம் நிறைவேற்றியது. டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவத்தளம் அமைந்திருப்பதால் ஷாகோஸ் தீவுக்கூட்டம் நன்கு பிரபல்யமானதாக விளங்குகிறது. பொதுச்சபையின் தீர்மானம் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், அது ஐக்கிய இராச்சியத்துக்கு சினத்தை ஏற்படுத்தக்கூடியதேயாகும்.

கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள்

அமெரிக்காவுடன் கூட்டாக டியாகோ கார்சியாவில்  இராணுவத்தளத்தை அமைப்பதற்காக அந்த தீவை ஷாகோஸின் ஏனைய தீவுகளில் இருந்து தனியாக வேறுபடுத்துவதற்கு 1965 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானத்தையடுத்து ஷாகோஸ் தீவுக்கூட்டம் பல தசாப்தங்களாக மொரீசியஸுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான தகராறுக்கு காரணமாக விளங்கிவருகிறது. பிரிட்டனின் ஒரு காலனி நாடாக இருந்த மொரீசீயஸ் 1968 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தது.ஆனால், ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான இறையாண்மை தனக்கே இருக்கிறது என்று உரிமைகோரி அதைத்  திருப்பிக் கையளிக்க ஐக்கிய இராச்சியம் மறுத்தது.

இராணுவத்தளத்தை நிர்மாணிப்பதற்கு வசதியாக டியாகோ கார்சியாவில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் வெளியேற்றிய ஐக்கிய இராச்சியம் மொரீசியஸுக்கு இழப்பீடாக வெறுமனே 40 இலட்சம் பவுண்களை கொடுத்தது. சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு முரணாக  1967 -- 1973 காலகட்டத்தில் சுமார் 1500 ஷாகோஸ்வாசிகளை ஐக்கிய இராச்சியம் மொரீசியஸுக்கும் சீஷெல்ஸுக்கும் பலவந்தமாக அனுப்பியது ;  தங்கள் வீடுவாசல்களுக்கு திரும்பிச்செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பல தசாப்தங்களாக தகராறு நீடிக்கிறது.மொரீசியஸ் அதன் அரசியலமைப்பின் பிரகாரம்  ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாட்டுக்கு சவால்விடுத்து ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான இறையாண்மைக்கு நியாயமானமுறையில் உரிமைகோரியது.

தீவுக்கூட்டத்திலிருந்து  டியாகோ கார்சியாவை ' சட்டவிரோதமாக ' வேறாக்கி தீவுகளை ஐக்கிய இராச்சியம் பிளவுபடுத்திவிட்டதாக சர்வதேச நீதிமன்றம் இவ்வருடம் பெப்ரவரியில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பும் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், ஷாகோஸின் காலனித்துவமய நீக்கம் அரைகுறையானது என்றும் காலனித்துவமய நீக்கச் செயன்முறையை முழுமையாக்கவேண்டிய கடப்பாடு ஐக்கிய இராச்சியத்துக்கு இருக்கிறது என்றும் சர்வதேச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியது. மொரீசியஸுக்கும் தனக்கும் இடையிலான தகராறு ஒரு இருதரப்பு பிரச்சினை என்றும் அதுவிடயத்தில் சர்வதேச நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் கிடையாது என்றும் ஐக்கிய இராச்சியம் வாதிட்டது.அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பிரிட்டிஷ் இந்துசமுத்திர நிலப்பரப்பு என்ற புதியதொரு வகையைக் கண்டுபிடித்த ஐக்கிய இராச்சியம்  ஷாகோஸ் மீது தனக்கு இறையாண்மை இருக்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்டது. பயங்கரவாதம், திட்டமிட்டமுறையிலான குற்றச்செயல்கள் மற்றும் கடற்கொள்ளை ஆகியவற்றுக்கு எதிரான கடல்சார் பாதுகாப்பை வழங்குவதற்கு டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவத்தளம் அவசியமானது என்றும் கூறி ஐக்கிய இராச்சியம் ஷாகோஸ் தொடர்பான தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வாதாடியது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப  ஐக்கிய இராச்சியம் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.அதனால், இந்த தகராறை ஐ.நா.வுக்கு கொண்டுசெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. ஷாகோஸ் தீவுக்கூட்டம் முழுவதன் மீதும் மொரீசியஸுக்கு இருக்கும் இறையாண்மையை இப்போது ஐ.நா.ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த தகராறில் ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஐ.நா.பொதுச்சபையின் தீர்மானமும் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. 

டியாகோ கார்சியாவில் இருந்து சகல மக்களையும் வெளியேற்றுவதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் மனித உரிமை மீறல்களுக்கு படுமோசமான ஒரு உதாரணமாகும்.ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் வளர்முக நாடுகளை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அடிக்கடி கண்டனம் செய்கின்றன. இப்போது அவ்விரு நாடுகளுமே் ஐ.நா.வில் அதே குற்வாளிக்கூண்டில் நிற்கின்றன.

மொரீசியஸ் இயல்பாகவே மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்திருக்கிறது.ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்தை பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் வரவேற்றிருக்கிறார்.மொரீசியஸை உச்சபட்சத்துக்கு ஆதரித்து நிற்குமம் ஆபிரிக்க ஒன்றியம் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட ஆபிரிக்காவின் பகுதிகள் இன்னமும் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று கூறியிருக்கிறது.

இந்த முழு விவகாரத்திலும் பகிரங்கத்தில் பெரிதாக தெரியாத முறையில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறது.மொரீசியஸுடனான இந்தியாவின் உறவுகள் தனித்துவமானவை. காலனித்துவமய நீக்கத்தில் இந்தியாவின் இந்தியா ஆற்றிவந்திருக்கும் சுறுசுறுப்பான பங்கை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் ஷாகோஸ் தீவுகள் மீதான மொரீசியஸின் உரிமைகோரலை இந்தியா உறுதியாக ஆதரிக்கும் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. மொரீசியஸை கட்டுப்படுத்த இந்தியாமீது செல்வாக்குச் செலுத்த அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முயற்சித்தன.பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவைப்படும்வரை ஷாகோஸை திருப்பி கையளிக்கமுடியாது என்று இரு நாடுகளும் மொரீசியஸுக்கு கூறிவிட்டன. எதுவும் மாறப்போவதில்லை, ஆனால் சில வகையான இசைவுபடுத்தலை அல்லது இணக்கப்பாட்டை செய்துகொள்ள முடியும். ஒரு தற்காலிக சமரச ஏற்பாடொன்றைச் செய்துகொள்வதில் இந்தியாவினால் கணிசமான பாத்திரம் ஒன்றை வகிப்பது சாத்தியமாயிருக்கும்.

பனிப்போர் காலத்தில் இந்துசமுத்திரத்தில் இராணுவத்தளங்கள் இருப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்தது. கடந்த மூன்று தசாப்தங்களில் இடம்பெற்றிருக்கும் புவிசார் -- மூலோபாய மாற்றங்கள் புதிய சவால்களைத் தோற்றுவித்திருக்கின்றன ; இந்துசமுத்திரத்தில்  ஊடுருவல்களைச் செய்திருக்கும் சீனா, தெனசீனக்கடலில் சட்டவிரோதமாக தீவுகளை ஆக்கிரமித்திருக்கிறது. கடல்பரப்பில் சீனாவின் தடம்பதிப்பு அதிகரித்துவருவதால் அதற்கு எதிரீடான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை மற்றைய நாடுகளுக்கு ஏற்படுகிறது.அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உளளடக்கிய தளர்வான ஒரு கூட்டணி இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது ; அமெரிக்காவின் பசுபிக் கட்டளை மையம்  இந்தோ -- பசுபிக் கட்டளை மையம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

 திட்டமிடல், ஒழுங்கமைப்பு பரிமாற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இந்திய -- அமெரிக்க பாதுகாப்பு உறவுகளும் கணிசமானளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன. அந்த உடன்படிக்கை இரு நாடுகளும் பரஸ்பரம் பரஸ்பரம் அவற்றின் குறிப்பிட்ட சில இராணுவ வசதிகளுக்கு செல்வதற்கான நுழைவுரிமையைக் கொடுக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த மற்றைய இருதரப்பு உடன்படிக்கை என்றால் அது தகவல் பரிமாற்ற ஒருங்கமைவு மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கையாகும்.அது இரு நாடுகளினதும் இராணுவங்களுக்கும் இடையே குறியீட்டு முறையிலான தகவல் பரிமாற்றத்துக்கு வசதி செய்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் டியாகோ கார்சியா தொடர்பிலும் அங்கு அமைந்திருக்கும் இராணுவத்தளம் தொடர்பிலும் இந்தியாவின் நயநுட்பமான அணுகுமுறையில் செல்வாக்கைச் செலுத்துகின்றன.

இறுதியில், இறைமை தொடர்பான பிரச்சினைக்கு  ஷாகோஸ் தீவுக்கூட்டங்கள் மீதான இறைமையை மொரீசியஸ் கொண்டிருக்க அனுமதிக்கின்றதும் டியாகோ கார்சியாவில் இராணுவத்தளம் தொடருவதை அனுமதிக்கின்றதுமான உடன்படிக்கைகளின் மூலமாகவே சாதுரியமாகத் தீர்வொன்றைக் காணவேண்டும்.இராணுவத்தளத்தை வைத்திருப்பதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நீண்டகாலத்துக்கு தீவை குத்தகைக்கு கொடுக்க மொரீசியஸ் இணங்கும்.சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஐ.நா.பொதுச்சபையின் தீர்மானத்தையும் அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் பாத்திரம் கூடுதலானளவுக்கு  பிரச்சினைக்குரியதாகிவிட்டது.  சற்று நிதானமாகச் சிந்தித்து  மொரீசியஸுக்கு இறைமையைக் கையளித்துவிட்டு அதேவேளை குத்தகை தொடர்பில் அமெரிக்காவுடன் ஏற்பாடொன்றைச்  செய்துகொள்வதே லண்டனுக்கு நல்லதாக அமையும்.அத்தகையதொரு ஏற்பாட்டை சாத்தியமாக்குவதில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும்.

  ( சக்கரவர்த்தி  முன்னாள் இந்தியத் தூதுவரும் வெளியுறவு அமைச்சில் செயலாளருமாவார் ) 

( இந்து )