அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோவின் இலங்கை விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று புதன்கிழமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் . ட்ரம்புடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். போம்பேயோவும் செல்கிறார்.

அதனோடு இணைந்ததாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் திட்டமிடப்பட்டுள்ள இந்து-பசுபிக் பிராந்தியத்துக்கான விஜயத்தின் போது தவிர்க்க முடியாத திட்டமிடல் நெருக்கடிகள் காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று இராஜாங்க செயலாளரினால்  இம்முறை கொழும்புக்கு விஜயம் செய்ய முடியாமல் போவதையிட்டு செயலாளர் பொம்பேயோ தனது வருத்தத்தை வெளிட்டுள்ளார்.

ஜனநாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுதந்திரமானதும் பகிரங்கமானதுமான இந்து-பசுபிக் பிராந்தியம் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டில் வேரூன்றியுள்ள இலங்கையுடனான எமது உறுதியான பங்காண்மையை கோடிட்டு காட்டுவதன் நிமித்தம் பின்னொருதினத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள அவர் எதிர்பார்த்துள்ளார்.

இந்த நோக்கங்களில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதுடன், எமது நீண்டகால பங்காண்மையை மேலும், முன்னேற்றிக் கொள்ளவும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.” என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மை க்பொம்பியோவின் இலங்கை விஜயமானது, நாட்டின் எதிர்க்காலத்திற்கே பாரிய ஆபத்தாக அமையும் என்று பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்தவாரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் விசேடமாக திருகோணமலைக்கு செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தமான சோபா ஒப்பந்தத்துக்கு இணங்க, அமெரிக்கத் துருப்புக்களை இலங்கைக்குள் இறக்குவது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.

அவ்வாறு அமெரிக்க இராணுவத்தினரை இலங்கைக்குள் இறக்குவதால் ஏற்படும் விளைவுகளை நாம் தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

சோபா ஒப்பந்தத்துக்கு இணங்க, இலங்கையில் வந்திறங்கும் அமெரிக்கத் துருப்புகளை, இலங்கை சட்டத்திற்கு இணங்க கட்டுப்படுத்த முடியாது.

இது எதிர்க்காலத்தில்  பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இவ்வாறு நாட்டுக்கே அச்சுறுத்தலான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றபோது அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.” என்று கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.