(நா.தனுஜா)

சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த தொழிற்துறைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு பல்வேறு நிவாரண செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாதிப்படைந்தது.அத்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஏற்பட்ட அச்சுறுத்தலைக் கவனத்திற்கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட நிவாரணத்தின் அளவை நிதியமைச்சு மேலும் அதிகரிக்கவுள்ளது.

அதேபோன்று சுற்றுலாத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதலீட்டுக்கடன் திட்டத்திற்காக எதிர்வரும் 2020 மார்ச் 31 ஆம் திகதி வரை நிவாரண காலமொன்றை வழங்குதல், அதற்கான கடன் பாதுகாப்பு நிதியில் உள்ளடக்கப்படுவதை விரிவுபடுத்தல், பஸ் உரிமையாளர்களுக்காக இவ்வாண்டு ஜுன் 30 ஆம் திகதி வரையில் இரு மாதங்களுக்கு கடன்களுக்கான நிவாரண காலஅவகாசம் வழங்குதல், இசைக்குழு மற்றும் சுற்றுலாத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், நபர்களுக்காக குழு கடன்திட்ட முறையொன்றை அறிமுகப்படுத்தல், 'சஞ்சாரக பொட்டோ" என்ற கடன்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.