வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக  33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சி விசாரணைகள்  எதிர்வரும் ஜூலை  மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேராவும் எவ்வித எதிர்ப்பும் வெளியிடாத நிலையிலேயே இந்த சாட்சி விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று விஷேட  மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் சாட்சி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்ப்ட்டது. 

இதன்போது கோத்தபாய ராஜபக்ஷ கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டதுடன், கடந்த 9 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாகவும் அவருக்கு  6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதால் வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்குமாறும், முதல் பிரதிவாதியான கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்றி நீதிமன்றத்தில் கோரினார்.

இதற்கிணங்க, சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்த விசேட மேல் நீதிமன்றம், கோத்தபாய ராஜபக்ஸவுக்கு வெளிநாடு செல்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிடுமாறும் அவர் கோரினார். 

எவ்வாறாயினும் 4 சாட்சியாளர்கள் இன்றைய தினம் சாட்சியளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கின் ஒன்பதாவது சாட்சியாளரையும் அன்றைய தினம்  மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்க மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.