தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். 


ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த இருவரும் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது குறித்து பிரதமர் ரணில் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். 

இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக விலகியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது உசிதமானது அல்லவென ரவூப் ஹக்கீம் இதன்போது ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் முஸ்லிம் மக்கள் அரசின் மீது வெறுப்படையும் நிலை ஏற்படலாம் என்பதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கூட்டு ஒற்றுமையை அது பாதிக்குமெனவும் ஹக்கீம் ரணிலிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது