"தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா,  சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எனது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு, மே 16ம் திகதி தொடங்குகிறது.  அதனால் ஷ_ட்டிங் போய்விடுவேன். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன். ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுவிட்டு சென்றனர். இந்த முறை வாக்களிப்பதற்காக கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இத்தனைக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது?" என்று கண்சிவந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் பதில் அளித்த பதில்களும் வருமாறு:

உங்கள் ரசிகர்களை எந்த கட்சிக்கு வாக்களிக்க சொல்வீர்கள்?

முதலில் என் ரசிகன் எனது அலுவலகத்திற்கு வரும்போது, செருப்பை கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரச்சொல்லுவேன். அதுபோல, திரும்ப செல்லும் போது, அந்த செருப்பை மாட்டிக்கொண்டு செல் என்று சொல்லுவேன். அதற்காக நான் செருப்பு என்று சொன்னதை தவறான உவமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் அரசியல் கொண்டு வர வேண்டாம். என்னுடைய நற்பனி இயக்கங்களுடன் சேர்ந்து தொண்டு செய்வதே போதும்.

நீங்கள் சிவாஜி வாரிசு என்று சொல்கிறீர்கள். அவருடைய ஓட்டையே வேறு ஒருவர் போட்டு விட்டாரே?

பதில் அளிக்காமல் சிரித்தார்.

சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்துக்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்?

முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு இந்த தலைப்பு பிடித்திருக்கிறது. அதனால் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன். 

நீங்கள் ஏற்கனவே நடித்த தசாவாதாரம் படத்தில் நடித்த பல்ராம் நாயுடு கேரக்டரின் தொடர்ச்சிதான் சபாஷ் நாயுடுவா? 

ஐயோ, அது வேறு இது வேறு, அது முழுக்க முழுக்க காமெடி. இது கதையும், காமெடியும் சேர்ந்த ஒரு கலவை. 

உங்கள் மகள் ஸ்ருதி சம்பளம் வாங்கி விட்டாரா?

கமல் ஸ்ருதியை பார்க்க, அவர் கையை காட்டி சமிஞ்சை செய்தார்.

நீங்களும், ரஜினியும் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட்டுக்கு விஜய்யும், அஜித்தும் வரவில்லையே ஏன்?

தயவு செய்து இந்த விஷயத்தை அரசியல் ஆக்காதீர்கள். நடிகர் சங்கம் எல்லோருக்கும் பொதுவானது. நடிகர் சங்கத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. விஜய், அஜித் விஷயம் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் சுமுகமாக பேசி முடிப்பார்கள்.