இயன் மொர்கனின் இடைவிடாத அதிரடியுடன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 397 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை மான்செஸ்டரில் 3.00 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணிசார்பில் ஜேம்ஸ் வின்ஸ் 26 (31) ஓட்டத்தையும், ஜோனி பெயர்ஸ்டோ 90 (99) ஓட்டத்தையும், ஜோ ரூட் 88 (82) ஓட்டத்தையும், மைதானத்தில் சிக்ஸர் மழை பொழித இயன் மோர்கன் மொத்தமாக 71 பந்துகளில் 17 ஆறு ஓட்டம் 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 148 ஓட்டங்களையும் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், மொய்ன் அலி 9 பந்துகளில் 4 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 31 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தமாக 25 ஆறு ஓட்டங்களையும், 21 நான்கு ஓட்டங்களையும் விளாசித் தள்ளியுள்ளது.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்படீன் நைய்ப் டூவ்லட் சத்ரான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Photo credit : ICC